ஈரானைச் சேர்ந்த மெஹ்ரான் கரிமி நாசேரி என்ற நபர் 18 ஆண்டுகள் தனது வீடுபோல் வசித்து வந்த சார்லஸ் டி கோல் விமான நிலையத்தில் சனிக்கிழமை அன்று மரணமடைந்தார்.

பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் டெர்மினல் 2F-ல் இருந்த நேரத்தில் 77 வயதான நாசேரி மாரடைப்பால் மரணமடைந்ததாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.

பிரிட்டன் கட்டுப்பாட்டில் இருந்த ஈரானில் 1945 ம் ஆண்டு ஈரானிய தந்தைக்கும் பிரிட்டிஷ் தாய்க்கும் பிறந்தவரான நாசேரி 1974 ம் ஆண்டு இங்கிலாந்தில் கல்வி பயின்று ஈரான் திரும்பினார்.

ஈரானில் அரசுக்கு எதிராக கிளர்ச்சி செய்ததாக எந்தவித ஆவணங்களுமின்றி நாடு கடத்தப்பட்டார். ஐரோப்பிய நாடுகளிடம் தஞ்சம் கேட்ட இவருக்கு பெல்ஜியத்தில் உள்ள ஐ.நா. மனித உரிமை அமைப்பு அகதியாக சான்றளித்தது.

1988 ம் ஆண்டு பாரிஸ் வந்த இவரிடம் அகதி குறித்த சான்று இல்லாததாலும் வேறு நாடுகளுக்கு அனுப்ப தேவையான பாஸ்போர்ட் உள்ளிட்ட சான்று இல்லாததாலும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டார்.

1988 முதல் 2006 ம் ஆண்டு வரை சார்லஸ் டி கோல் விமான நிலையத்தின் டெர்மினல் 1-ஐ தனது சொந்த வீடுபோல் பாவித்து தங்கி வந்த மெஹ்ரான் கரிமி நாசேரி விமான நிலைய ஊழியர்களுக்கான கழிவறை மற்றும் குளியலறையை பயன்படுத்தி வந்ததோடு விமான நிலையத்தின் ஓரத்தில் நாற்காலி போட்டு நிரந்தரமாக தங்கிவிட்டார்.

நாளடைவில் விமான நிலையத்திற்கு வருவோர் போவோரின் கவனத்தை ஈர்த்த இவர் 2006 ம் ஆண்டு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் இருந்து திரும்பிய நாசேரி பாரிஸ் நகரில் உள்ள மறுவாழ்வு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டார்.

பல ஆண்டுகளாக விமான நிலையத்திலேயே தங்கி அங்குள்ள ஊழியர்களுடன் நெருங்கிப் பழகிய நாசேரி அவ்வப்போது அங்கு வந்து சென்றார்.

கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு மீண்டும் விமான நிலையம் வந்து தங்கிய இவர் திடீரென மாரடைப்பால் இறந்து போனார்.

மெஹ்ரான் கரிமி நாசேரி வாழ்க்கையை கருவாக கொண்டு 2004 ம் ஆண்டு ‘தி டெர்மினல்’ என்ற படத்தை ஸ்டீவன் ஸ்பீல்பெர்க் இயக்கி இருந்தார்.

‘தி டெர்மினல்’ தவிர “லாஸ்ட் இன் டிரான்சிட்’ என்ற பிரெஞ்சு மொழி திரைப்படம் மற்றும் ‘ஃபிளைட்’ என்ற ஒபேரா-வும் இவரது வாழ்க்கை சம்பவத்தை தழுவி வெளியானது.