சுவாதி கொலையில் பயங்கரவாதிகள் தொடர்பு?

சென்னை,

மிழகத்தை பரபரப்பாக்கிய சென்னை சுவாதி கொலை விவகாரத்தில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த 2016ம் ஆண்டு  ஜூன் மாதம் 24 ந்தேதி சென்னை  நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், அதிகாலையிலேயே மர்ம நபர் ஒருவரால் கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார் மென் பொறியாளர் சுவாதி என்ற இளம்பெண்.

கடந்த ஆண்டு  ஜூன் 24ந் தேதி சுவாதி கொலையானவுடன் ஆரம்பமான சர்ச்சை ராம்குமார் மரணமடைந்த பிறகும் நீடித்து கொண்டே செல்கிறது.

சுவாதி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ராம்குமார், சிறையில் தற்கொலை செய்து கொண்டதாக சிறைத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. ஆனால், ‘ராம்குமார் தற்கொலை செய்யவில்லை; திட்டமிட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார்’ என அப்போதே சர்ச்சைகள் கிளம்பின.

அதன் தொர்ச்சியாக ராம்குமாரின் மரணத்தில் மர்மம் இருப்பதாக ராம்குமாரின் பெற்றோரும் வழக்கறிஞரும் குற்றம் சாட்டினர்.  ராம்குமார் தற்கொலையுடன் சுவாதி கொலை வழக்கின் மர்ம முடிச்சு அவிழ்க்கப்படாமலே விசாரணை என்ற பெயரில் நீடித்துக்கொண்டே செல்கிறது…

இந்த நிலையில், ராம்குமாரின் வழக்கறிஞர் ராம்ராஜ் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவேர் கூறியதாவது,

”ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அவரது மரணத்தில் பல மர்மங்கள் இருக்கின்றன. அதனால், அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையைத் தர வேண்டும் என்று ராம்குமாரின் பெற்றோர் கடந்த 7 மாதங்களாகக் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.

ஆனால், ராம்குமார் தொடர்பான எந்த ஆவணங்களையும் எங்களுக்குத் தர மறுக்கிறார்கள். காவல்துறை மட்டும் அல்லாமல் நீதிமன்றமும் ராம்குமார் குறித்த ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது.

கீழமை நீதிமன்றம் மட்டும் அல்லாமல் உயர் நீதிமன்றமும் திட்டமிட்டே ராம்குமார் தொடர்பான ஆவணங்களைக் கொடுக்க மறுக்கிறது.

அரசியலமைப்புச் சட்டத்துக்கு உட்பட்டு நாங்கள் மீண்டும் நீதிமன்றத்திடம்தான் முறையிட வேண்டிய நிலைமை. ஆனால், நீதிமன்றங்கள் எதையோ மறைக்க விரும்புவதால் ஆவணங்களைத் தர மறுக்கின்றன.

அதனால், ராம்குமாரின் பெற்றோர் செங்கோட்டை காவல்நிலையத்துக்குச் சென்று காவல்துறை, நீதித்துறை மீது கொலை வழக்குப் பதிவு செய்யுமாறு புகார் கொடுக்க இருக்கிறார்கள்.

ராம்குமாரை அவரது வீட்டுக்கு வந்து காவல்துறையினர் பிடித்துச் சென்றபோதே கழுத்தை அறுத்துக் கொண்டதாகச் சொன்னார்கள்.

பின்னர், நீதிமன்றத்தின் பாதுகாப்பில் இருந்த அவர் மின் கம்பியைக் கடித்து தற்கொலை செய்து கொண்டதாகச் சொன்னார்கள்.

அவரது பாதுகாப்புக்கு நீதிமன்றம்தானே பொறுப்பு ஏற்று இருக்க வேண்டும்? அப்படியானால், சிறைக்குள் அவர் தற்கொலை செய்து கொண்டது தொடர்பாக நீதிபதிதானே புகார் செய்திருக்க வேண்டும்? அப்படி நடக்காதது ஏன்?

அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டிய சட்டம், மற்றவர்களுக்கு ஒரு விதமாகவும் பட்டியல் இன மக்களுக்கு வேறு விதமாகவும் செயல்படுகிறது.

குற்றவியல் சட்டத்தின்படி, ஒரு குற்றம் எங்கிருந்து தொடங்குகிறதோ அதில் தொடங்கி, அது  எங்கு முடிவடைகிறதோ அங்கு வரை எந்த இடத்திலும் புகார் செய்யலாம்.

அதன்படி இந்த வழக்கு தொடங்கிய செங்கோட்டை காவல்நிலையத்தில் ராம்குமாரின் பெற்றோர் புகார் அளிக்க உள்ளனர்.

சாமான்ய மக்களான ராம்குமாரின் பெற்றோர்களால் சென்னைக்குச் சென்று புகார் அளிக்க இயலாது என்பதால், இங்கேயே புகார் கொடுக்கிறார்கள்.

சுவாதி கொலை வழக்கின் பின்னணியில் பல மர்மங்கள் புதைந்து கிடக்கின்றன. அதன் பின்னணியில், தீவிரவாத இயக்கங்களுக்குத் தொடர்பு இருக்கக் கூடும் என்கிற சந்தேகமும் எங்களுக்கு உள்ளது.

அதனால், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணை நடத்த வேண்டும். இதில் நீதித்துறைக்கும் தொடர்பு இருப்பதால், சர்வதேச நீதிமன்றத்தின் விசாரணையைக் கோருவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம்.

அதற்கு முன்பாக அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் சந்திக்கத் திட்டமிட்டு உள்ளோம்.

ஏற்கெனவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனைச் சந்தித்து எங்களது கோரிக்கை குறித்துப் பேசினோம்.

இன்னும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து இந்த வழக்கில், உண்மையைக் கண்டுபிடிக்க வேண்டுமென்பதை வலியுறுத்துவோம்.

ராம்குமார் மரணத்தின் பின்னணியை திட்டமிட்டு மறைக்க முயற்சிப்பவர்களை அம்பலப்படுத்து வோம்” என்றார்.

கிடப்பில் போடப்பட்ட ராம்குமார் – சுவாதி பற்றிய செய்தி தற்போது வழக்கறிஞர் ராம்குமாரின் பேட்டியின் காரணமாக  மீண்டும் சூடுபிடித்துள்ளது.


English Summary
terrorists involved in the Swathi murder?