செங்கல்பட்டு: சென்னை அடுத்த செங்கல்பட்டு நீதிமன்ற வாசலில் ஒருவர் மீது வெடிகுண்டு வீசப்பட்டு, மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பதற்றத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை போன்ற சம்பவங்கள் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதுவும் காவல்துறையினர் அதிகம் காணப்படும் நீதிமன்றம், காவல்நிலையம் முன்பாகவே கொலை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.  ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் 13ந்தேதி அன்று கோவையில்,  குற்ற வழக்கு ஒன்றில் நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த இருவரை 4 பேர் கொண்ட அரிவாளால் வெட்டியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. காவல்துறையினரின் நடவடிக்கைகள் கடும் விமர்சனங்களை உருவாக்கியது.

இந்த நிலையில், இன்று கோவை போன்றே செங்கல்பட்டில் மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது. செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு ஆஜராக வந்த நபர்மீது, நீதிமன்றம் முன்பாகவே மர்ம கும்பல் நாட்டு வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்துள்ளனர்.

மக்கள் நடமாட்டம் மற்றும் காவல்துறையினர் அதிகம் உள்ள நீதிமன்றம் பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்றுள்ளது பொதுமக்களி டையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனால், அங்கு பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது. கொலையாளிகள் 5 பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் தேடி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.