டில்லி:

டோக்லாமில் மோதல் நிலவும் சூழ்நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

சிக்கிம் எல்லையில் இந்தியா, சீனா, பூடான் நாடுகள் சந்திக்கும் டோக்லாம் பகுதியில் சீனப்படைகள் மேற்கொண்ட அத்துமீறிய சாலைப் பணிகளை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர்.

இதனையடுத்து இரு நாடுகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு இரு நாடுகளும் படைகளை குவித்து உள்ளன. இந்நிலையில், இந்தியா தனது படைகளை விலக்கிக்கொள்ள வேண்டும் என சீனா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் சிக்கிம் எல்லையில் இருந்து படைகளை வாபஸ் பெற முடியாது என இந்தியா திட்டவட்டமாக தெரிவித்துவிட்டது.

இந்தியா மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்வோம் என சீனா மிரட்டி வருகிறது. இதனால் சுமார் 2 மாதங்களாக அங்கு போர் பதற்றம் நீடித்து வருகிறது. டோக்லாம் பகுதியில் பூடான் சார்பில் இந்தியா நுழைந்திருப்பதாக சீனா குற்றம் சாட்டியுள்ளது.

பூடான் இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்நிலையில் சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்களின் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளது. சிக்கிம், அருணாச்சலப் பிரதேசம் எல்லையில் இந்திய படை வீரர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு உள்ளது.

சீன எல்லையில் இந்திய ராணுவ வீரர்கள் அதிஉயர் உஷார் நிலையில் இருக்க அறிவுரை வழங்கப்பட்டு உள்ளது. சுக்னாவில் இருந்து இந்திய பாதுகாப்பு படை டோக்லாம் நோக்கி நகர்ந்து உள்ளது. இருப்பினும் எல்லையில் படை வீரர்கள் எண்ணிக்கை எவ்வளவு உயர்த்தப்பட்டு உள்ளது என்பதை அதிகாரிகள் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.

இருப்பினும் டோக்லாம் பகுதியில் படை வீரர்களின் எண்ணிக்கையானது அதிகரிக்கப்படவில்லை எனவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் சீன எல்லை பகுதியில் பதற்றம் நிலவுவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.