மும்பை: ஆரம்ப காலங்களில் நடுவரிசையில் களமிறங்கி வந்த தான், ஓபனிங் வாய்ப்பைப் பெறுவதற்கு அணி நிர்வாகத்திடம் நயந்து கெஞ்ச வேண்டியிருந்தது என்று தெரிவித்துள்ளார் இந்திய முன்னாள் சாதனை பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர்.
கடந்த 1994ம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் போட்டியில் அவர் தனக்கு ஓபனிங் வாய்ப்பு தரும்படி கெஞ்சினாராம்.
அவர் கூறியுள்ளதாவது, “உலகின் பல அணிகள் தங்களுடைய துவக்க விக்கெட்டுகளை பாதுகாப்பதற்காக வியூகம் அமைத்துவந்த தருணத்தில், எனது முயற்சி சற்று வித்தியாசனமானதாய் இருந்தது.
நான் தற்காப்பு ஆட்டம் ஆடாமல், துணிச்சலாக தாக்குதல் ஆட்டத்தை தொடங்கினேன். ஆனால், அந்த வாய்ப்பைப் பெறுவதற்கு நான் போராட வேண்டியிருந்தது. நான் இந்த முயற்சியில் தோற்றால் பிறகு இந்த வாய்ப்பைக் கோரமாட்டேன் என்று வாக்குறுதியளித்து அந்த வாய்ப்பைப் பெற்றேன்.
அந்தப் போட்டியில் நான் 49 பந்துகளில் 82 ரன்களை அடித்தேன். அதன்பிறகு ஓபனிங் வாய்ப்புகள் தானாகவே என்னைத் தேடி வந்தன. எனவே, நான் தற்போது சொல்ல வருவது என்னவென்றால் எப்போதும் பயம் கொள்ளாதீர்கள் என்பதுதான். எதிரணி பவுலர்களை துணிச்சலாக எதிர்கொள்ளுங்கள்” எஎன்றார்.
கடந்த 1989ம் ஆண்டே டெண்டுல்கர் சர்வதேச கிரிகெட்டில் அறிமுகமாகிவிட்டாலும், 1994ம் ஆண்டுதான் தனது முதல் ஒருநாள் சதத்தை அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒட்டுமொத்தமாக ஒருநாள் போட்டிகளில் 49 சதங்களை அடித்து அவர் உலக சாதனையைக் கையில் வைத்துள்ளார்.