டெல்லி: முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில், அதை எதிர்த்து தமிழ்நாடு  லஞ்ச ஒழிப்பு காவல்துறை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  மேல்முறையீடு மனு இன்று விசாரணைக்கு வர இருப்பதாக தகவல் வளியலாகி உள்ளது.

கடந்த அதிமுக ஆட்சியின்போது,  நெடுஞ்சாலை துறையில் டெண்டர் பெறப்பட்ட விவகாரத்தில் சுமார் 4,800 கோடி அளவுக்கு ஊழல் செய்ததாக திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி புகார் கூறியிருந்தார்.  . இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக விசாரணை நடத்த உத்தரவிட்டது. அத்துடன் சிபிஐ விசாரணைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி வழக்கு தாக்கல் செய்த நிலையில், உச்சநீதிமன்றம் அந்த வழக்கை ரத்து செய்தது. பின்னர் மீண்டும் இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் விசாரிக்க அனுமதி அளித்தது.

லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் எடப்பாடி பழனிசாமி மீது குற்றமில்லை என 2018 ஆம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்ட முதற்கட்ட விசாரணை அறிக்கையை லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையர் ஏற்கவில்லை. மீண்டும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி லஞ்ச ஒழிப்பு துறையின் ஆரம்பகட்ட விசாரணையின் அடிப்படையில் இந்த வழக்கை முடித்து வைக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதிடப்பட்டது. இதை தொடர்ந்து திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதியின் மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஆட்சி மாற்றம் காரணமாக எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில் புதிய விசாரணை தேவையில்லை என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கூறியது.

இதைத்தொடர்ந்து, சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறை உச்ச நீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்தது. இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது.

ரூ.4800 கோடி டெண்டர் முறைகேடு: இபிஎஸ் மீதான மேல்முறையீடு வழக்கு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைப்பு…