சென்னை: சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில் நிலத்தில், கட்டப்படும் கலாச்சார மையம் கட்டுமான பணிக்கு சென்னை உயர்நீதி மன்றம் இடைக்கால தடை வித்துள்ளது.

தமிழ்நாடு அரசின் இந்து அறநிலையத்துறை, இந்து கோவில்களுக்கு சொந்தமான நிதியில்   இருந்து ரூ.26.78 கோடி செலவில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலுக்கு சொந்தமான நிலத்தில்,  கலாச்சார மையம் அமைப்பப்படும் என ஏற்கனவே அறிவித்தது.   தொடர்ந்து, அதில் கட்டுமான பணிகள் தொடங்கின. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், கட்டுமானப் பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான 22.80 கிரவுண்டு  நிலம் பசுமை வழிச்சாலை பகுதியில் உள்ளது. இந்த  நிலத்தில் ரூ.26.78 கோடி செலவில் கலாச்சார மையம் கட்டுவது தொடர்பாக தமிழக அரசு கடந்த 2023ம் ஆண்டு  செப்.4-ம் தேதி அரசாணை பிறப்பித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆலய வழிபாட்டாளர்கள் சங்கத் தலைவரான மயிலாப்பூரைச் சேர்ந்த டி.ஆர். ரமேஷ் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவரது மனுவில்,   இந்து சமய அறநிலையத்துறையின் சட்ட விதிகளை பின்பற்றாமல், உரிய அதிகாரமில்லாமல் இந்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.88 கோடி மதிப்புள்ள இந்த நிலத்தில் கலாச்சார மையம் அமைப்பதன் மூலம் ஆண்டுக்கு ரூ.10 கோடி வாடகை வருவாயும், கோயில் நிதி ரூ.28 கோடியை கட்டுமானத்துக்கு பயன்படுத்துவதால் ஆண்டுதோறும் ரூ.2.50 கோடி வட்டி வருவாயும் பாதிக்கப்படும்.

அரசு கலாச்சார மையம் அமைக்க விரும்பினால், அதை கோயில் நிலத்தில், கோயில் நிதியில் அமைக்க முடியாது. அரசு நிலத்தில், அரசு நிதியில் கலாச்சார மையம் அமைத்தால் வரவேற்கத்தக்கது. மேலும், திட்ட அனுமதி இல்லாமல் கலாச்சார மையம் அமைக்க முடியாது. எனவே, கலாச்சார மையத்துக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளதால் அதற்கு தடை விதிக்க வேண்டும். இதுதொடர்பான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கை  விசாரித்த உயர் நீதிமன்றம், கோயில் நிதியை பயன்படுத்துவது தொடர்பாக பொதுமக்களிடம் ஆட்சேபங்கள் பெறப்பட்டதா என்பது குறித்து விளக்கமளிக்கும் படி அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டிருந்தது. அதன்படி, இந்த வழக்கு நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி ஆகியோர் அடங்கிய அமர்வில்  மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது தமிழக அரசு மற்றும் அறநிலையத்துறை சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், உரிய அனுமதி பெறாமல் எந்த கட்டுமானமும் மேற்கொள்ளப்படாது என உத்தரவாதம் அளித்தார். மேலும், கோயில் நன்கொடையை பயன்படுத்துவதாக இருந்தால் மட்டுமே ஆட்சேபங்கள் கோர வேண்டும் என்றும், இந்த கலாச்சார மையம் மூலமாக கோயிலுக்கும் வருவாய் கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.

அறநிலையத்துறை சார்பில் அளிக்கப்பட்ட உத்தரவாதத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த வழக்கை ஜூன் மூன்றாவது வாரத்துக்கு தள்ளிவைத்தனர். மேலும், இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அரசு தரப்புக்கு உத்தரவிட்டனர். அத்துடன் இந்த வழக்கு முடியும் வரை கலாச்சார மையம் அமைப்பதற்கான கட்டுமானப்பணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும் உத்தரவிட்டுள்ளனர்.