சென்னை: கோயில்களின் பயன்பாட்டில் இல்லாத நகைகளை கணக்கெடுத்து, அதை உருக்கி விற்பனை செய்து வைப்பு நிதியாக வைக்கப்படும் என அறநிலையத்துறை  அமைச்சர் சேகர்பாபு கூறி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் இன்று அறநிலையத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் சேகர்பாபு ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்தில்  சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன், இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் ஜெ.குமரகுருபரன் உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து செய்தியளார்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது,  சட்டமன்ற மானிய கோரிக்கையின்போது இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 112 அறிவிப்புகள் வெளியிடப்பட்டன. அதுகுறித்து விவாதிக்கப்பட்டதுழ. முதல்கட்டமாக ஏற்கனவே 5 அறிவிப்புகள் நடைமுறைப் படுத்தப்பட்டு உள்ளன. இந்த ஆண்டுக்குள் 500 கோவில்களில் திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது. அதற்காக  கோவில்கள் 3 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

கோவிலுக்கு சொந்தமான நகைகள் குறித்து குழுக்கள் அமைக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. சென்னை மண்டலத்துக்கு நீதிபதி ராஜீ, மதுரை மண்டலத்துக்கு நீதிபதி ஆர்.மாலா, திருச்சி மண்டலத்துக்கு நீதிபதி ரவிசந்திரபாபு ஆகியோர் தலைமையில் குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்த குழுவினர் கோவில்களில் உள்ள நகைகளை ஆய்வு செய்து, பயன்பாட்டில் இல்லாத நகைகளை கண்டறிந்து, அதை  மத்திய அரசின் உருக்காலையில் உருக்கி தங்க பிஸ்கட்டுகளாக மாற்றும் நடவடிக்கையில் ஈடுபடுபவர். பின்னர் அந்த தங்க பிஸ்கட்டுகள்  வைப்பு நிதியாக வைக்கப்பட்டு, அதன் மூலம் கிடைக்கும் வட்டித் தொகையில் கோவில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.