திலாபாத், தெலுங்கானா

தெலுங்கானா அதிலாபாத் மாவட்டத்தில் உல்ள ஞான சரஸ்வதி கோவில் அம்மன் கிரீடத்தில் உள்ள மரகதக் கல் காணாமல் போய் விட்டது.

தெலுங்கானாவில் உள்ள அதிலாபாத் மாவட்டத்தில் பசார் என்னும் இடத்தில் ஒரு ஞான சரஸ்வதி கோவில் உள்ளது. இந்த கோவில் ஐதராபாத் நகருக்கு வடக்கே 200 கிமீ தூரத்தில் அமைந்துள்ளது. இந்த கோவில் குழந்தைகளுக்கு படிப்பு ஆரம்பிக்கும் விழாவான அட்சராப்பியாசத்துக்கு புகழ் பெற்றதாகும். சென்ற வருடம் இந்த கோவிலில் சிலையை அருகில் உள்ள பள்ளி நிர்வாகம் தங்கள் பள்ளியில் நடந்த அட்சராப்பியாச விழாவுக்கு எடுத்துச் சென்றது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்த கோவிலுக்கு ஐதராபத்தை சேர்ந்த ஒரு செல்வந்தர் கடந்த 2006 ஆம் வருடம் மரகதக் கிரீடம் ஒன்றை அளித்துள்ளார். அந்த மரகதக் கிரீடத்தில் நடுவில் ஒரு மரகதக் கல்லும் சுற்றி நவரத்தினங்களும் பதிக்கப்பட்டிருந்தன. நேற்று காலை இந்த கோவிலை திறந்த அர்ச்சகர் இந்த கிரீடத்தில் உள்ள மரகதக் கல்லை காணாததால் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக அவர் அது கீழே விழுந்திருக்கலாம் என்னும் சந்தேகத்தில் கோவில் முழுவதும் தனது உதவியாளர்களுடன் தேடி உள்ளார். அது கிடைக்காதாதால் கோவில் அதிகரிகளுக்கு தகவல் அளிக்கப்பட்டது.

கோவிலில் அம்மனின் கிரீடத்தில் உள்ள மரகதக் கல் காணாமல் போனது பக்தர்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தெலுங்கானா மாநில அறநிலையத் துறை அமைச்சர் இந்திராகரன் ரெட்டி இது குறித்து விசாரணை நடத்த ஆணை இட்டுள்ளார். விரைவில் விசாரணை அறிக்கையை தமக்கு அளிக்க வேண்டும் எனவும் அவர் அறநிலைய ஆணையருக்கு உத்தரவிட்டுள்ளார்.