ஐதராபாத்:

போதை பொருள் வழக்கு விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ள 12 தெலுங்கு திரையுலகினர் உள்பட அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். குற்றவாளிகளாக கருதப்படமாட்டாது என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார்.

ஐதரபாத் போதை பொருள் வழக்கு தொடர்பாக ஆய்வு மேற்கொண்ட தெலங்கானா முதல்வர் சந்திரசேகராவ் கூறுகையில், ‘‘போதை பொருட்களை விற்பனை செய்வோர், விநியோகம் செய்வோர் குறித்த தகவல்களை அமலாக்கம் மற்றும் கலால் துறையினர் சேகரித்து வருகின்றனர்.

அதனால் போதை பொருள் பழக்கம் உள்ளவர்கள் அதை மாற்றிக் கொள்ள வேண்டும். குற்றவாளிகளை கண்டுபிடிக்க அதிகாரிகளுக்கு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.

இந்த குற்ற செயல்களில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. போதை பொருள் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் தப்பிக்க விடமாட்டோம்’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘சில திரையுலகத்தை சேர்ந்தவர்கள் போதை பொருட்கள் பயன்படுத்துவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்களிடம் கேள்விகள் கேட்கப்படுகிறது. அவர்கள் குற்றவாளிகளாக கருதப்படமாட்டார்கள். பாதிக்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள்.

போதை பொருள் விநியோகம் மற்றும் விற்பனை செய்வது குற்ற செயலாகும். திரையுலகினருக்கு போதை பொருள் சப்ளை, விற்பனை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இது வரை 12 திரையுலகினர் உள்பட 27 பேரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில் திரையுலகினர் குறிவைக்கப்படுவதாக கூறப்படும் குற்றச்சாட்டுக்கள் ஏற்புடையதல்ல’’ என்றார்.

மேலும், இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இது வரை 2 வெளிநாட்டினர் உள்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஸ்பெயின், தாய்லாந்து, போர்ச்சுகல், நைஜீரியா, நெதர்லாந்து, கொலும்பியா ஆகிய நாடுகளில் இருந்து போதை பொருள் இங்கு விற்பனை செய்யப்படுவதாக தகவல் கிடைத்துள்ளது.

இது தொடர்பாக முக்கிய துப்பு கிடைத்துள்ளது. இந்த தகவல்களின் அடிப்படையில் விசாரணை தொடரும். தகவல் தொழில்நுட்ப துறையில் போதை பொருள் புழக்கம் இருப்பதாக கூறுவதில் உண்மையில்லை.
சமூக சீரழிவை ஏற்படுத்தும் போதை பொருளை வேரோடு ஒழிக்க அரசு உத்தரவாதம் எடுத்துள்ளது. போதை பொருள் கொடிகட்டி பறக்கும் மாநிலங்களில் பட்டியலில் தெலங்கானாவும் இல்லை, நகரங்கள் பட்டியலில் ஐதராபாத்தும் இல்லை.

பாதிக்கப்பட்டவர்கள் துன்புறுத்தப்படமாட்டார்கள். போதை புகைக்கும் மையங்கள், சூதாட்ட விடுதுகள், கஞ் சா விற்கும் இடங்கள், பெண்களை துன்புறுத்தும் இடங்கள் குறித்த விபரங்களை அளிப்போருக்கு ரூ. 1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும்’’ என்று தெரிவித்துள்ளார்.

சந்திரசேகரராவ் இந்த அறிவிப்பை வெளியிட்ட பிறகே தெலங்கானா திரையுலகினர் பலரும் நிம்மதி அடை ந்துள்ளனர்.