பாட்னா

லாலு பிரசாத் யாதவ் மகன் தேஜஸ்வி யாதவ் தனது திருமணம் எப்போது என்பதை தெரிவித்துள்ளார்.

தற்போது பீகாரில் அராரியா தொகுதியில் பெற்ற வெற்றி மூலம் ராஷ்டிரிய ஜனதா தள தலைவரும் முன்னாள் பீகார் முதல்வர் லாலுபிரசாத் யாதவின் மகனுமான தேஜஸ்வி யாதவ் அரசியலில் அடுத்த அடிக்கு முன்னேறி உள்ளார்.    காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் திருமணம் பற்றி அவரிடம் கேட்பது போலவே தற்போது தேஜஸ்வி யாதவிடமும் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இவ்வாறு கேட்டதற்கு தேஜஸ்வி யாதவ், “எனது திருமணத்தை எனது பெற்றோர்கள் முடிவு செய்வார்கள்.   அவர்கள் பார்க்கும் பெண்ணையே நான் திருமணம் செய்துக் கொள்வேன்.    ஆனால் எனது ”அரசியல் அண்ணன்கள்” இன்னும் திருமணம் ஆகாமல் உள்ளனர்.   அதனால் அவர்களின் திருமணம் முடிந்த பின் நானும் திருமணம் செய்துக் கொள்வேன்”  எனக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் ‘அரசியல் அண்ணன்கள் என குறிப்பிட்டவர்கள் மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வானின் மகன் சிராக் பாஸ்வான், பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மகன் நிஷாந்த் குமார் மற்றும் தேஜஸ்வியின் சொந்த அண்ணன் தேஜ் பிரதாப் ஆகியோர் ஆவார்கள்.

ஒருமுறை தேஜஸ்வி யாதவை திருமணம் செய்துக் கொள்ள தயார் என வாட்ஸ்அப் மூலம் 44000 பெண்கள் விருப்பம் தெரிவித்திருந்தனர்.  அப்போது தேஜஸ்வியின் தாயாரும் முன்னாள் பீகார் முதல்வருமான ராப்ரி தேவி, “எனக்கு திரையரங்குகளுக்கும் ஷாப்பிங் மால்களுக்கும் செல்லும் மருமகள் தேவை இல்லை.   என் குடும்பத்தை கவனித்து பெரியவர்களை மதிக்கும் பெண் தான் தேவை” என கருத்து தெரிவித்தது குறிப்பிடத் தக்கது.