டில்லி

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கொடநாட்டு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடந்த  திருட்டு சம்பவம் குறித்து திடுக்கிடும் செய்திகள் வெளியாகி உள்ளன.

தெகல்கா என்னும் செய்தி ஊடகம் பல அதிர்ச்சி தகவல்களை புலனாந்து வெளியிட்டு வருகிறது. பாஜக கட்சித் தலைவர் பங்காரு லட்சுமண் லஞ்சம் பெற்ற விவகாரத்தை முதலில் வெளியிட்டது தெகல்கா என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்நிலையில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொள்ளை மற்றும் கொலைகள் பற்றி பல திடுக்கிடும் தகவல்களை தெகல்கா முன்னாள் செய்தியாளர் தெரிவித்துள்ளார்

இன்று தெகல்கா முன்னாள் செய்தியாளரான சாமுவேல் மேத்தீவ்ஸ் வெளியிட்டுள்ள தகவலின் படி “கடந்த 2017 ஆம் ஆண்டு ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கொள்ளை சம்பவம் நடந்தது. இந்த கொள்ளை நடந்ததற்கு முக்கிய காரணம் ஜெயலலிதாவிடம் இருந்த பல்வேறு ஆவணங்களை திருடுவதே ஆகும். இந்த கொள்ளையில் 10 பேர் கொண்ட ஒரு குழு ஈடுபட்டது.

அந்த கொள்ளையில் அதிமுக வின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் அமைச்சர்கள் எழுதிக் கொடுத்த மன்னிப்பு கடிதங்கள் திருடப்பட்டன. இந்த கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்களுக்கு பல உறுதி மொழிகள் அளிக்கப்பட்டன. அதில் முக்கியமாக கொளையடிக்கும் போது அனைத்து சிசிடிவி காமிராக்களும் அணைத்து வைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சதி திட்டத்தை தீட்டியவர் தமிழகத்தின் தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆவார். அவர் 5 கொலைகளுக்கு பின்னணியில் இருந்துள்ளார். அது மட்டுமின்றி ஜெயலலிதா மரணத்தில் எடப்பாடி பழனிச்சாமிக்கு பங்குண்டு என எனக்கு சந்தேகமாக உள்ளது. அவர் மருத்துவமனையில் இருந்த போது இந்த திருட்டை நடத்திய எடப்பாடி பழனிச்சாமி அமைச்சர்களின் ஒப்புதல் கடிதங்களை கைப்பற்றி அவர்களை தங்கள் கைப்பிடிக்குள் வைத்திருக்க திட்டமிட்டுள்ளார்.

ஜெயலலிதா தவறு செய்யும் அமைச்சர்கள் தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பு கேட்பதை வீடியோ பதிவு செய்துள்ளார். எடப்பாடி அந்த வீடியோ ஆவணங்களை திருடி உள்ளார். ஜெயலலிதா அந்த வீடியோக்களை வைத்து மிரட்டியே கட்சியினரை பணிய வைத்துள்ளார். இந்த திருட்டில் தொடர்புள்ள கனகராஜ் உள்ளிட்ட பலரின் மரணம் அனைத்தும் எடப்பாடி பழனிச்சாமி திட்டமிட்டு நடத்தியது.” என கூறி உள்ளார்.

 

[youtube https://www.youtube.com/watch?v=n14KLpHESao]