அஸ்ஸாம், மேற்கு வங்கம் ஆகிய வளர்ச்சியில் பின்தங்கிய மாநிலங்களில் உள்ள கிராமப்புறங்களிலிருந்து பெரியவர்கள் மற்றும் குழந்தைகள் உட்பட ஆள் கடத்தல் அதிகளவில் நடைபெற்று வருகின்றது. தேசிய குற்றப் பதிவுகள் அமைப்பின் ( என்.சி, ஆர்.பி.) 2015 வருட புள்ளிவிவரப்படி, மேற்கு வங்காளத்தில் மொத்தம் 1,255 கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் 1,119 (அதாவது 89%) குழந்தைகள் கடத்தப்பட்ட வழக்காகும். மேற்கு வங்க மாநிலம் “குழந்தை கடத்தலுக்கு” ஒரு மூலமாகவும், இடமாற்றம் செய்யுமிடமாகவும் மற்றும் இலக்காகவும் விளங்குகின்றது.

பொதுவாய், கடத்தல்காரர்கள் அல்லது அவர்களின் தரகர்கள் ஒரு கிராமத்தில் உள்ள ஒரு ஏழை குடும்பத்தினரை அடையாளம் கண்டு, அவர்கள் வீட்டிற்கு சென்று வீட்டு வேலை செய்யும் குழந்தைகளின் புகைப்படங்கள் கொண்ட ஒரு ஒரு ஆல்பத்தைக் காண்பித்து ஆசையைத் தூண்டுவர். உங்கள் குழந்தைகளை வேலைக்கு அனுப்பினால், மாதாமாதம் நல்ல சம்பளம்(ரூ 1,500 ரூ .2,000)அளிப்பதாக உறுதி அளிப்பார்கள். ஒரு மாத சம்பளத்தை முன்பணமாகக் கொடுத்து குழந்தைகளைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து ரயிலில் ஏற்றித் தில்லி, ஹரியாணா, உத்தரப் பிரதேசம் மற்றும் ஜம்மு-காஷ்மீர் உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குக் கடத்தி விடுவர். ஓரிரு மாதங்களுக்குப் பெற்றோருக்கு குழந்தையின் ஊதியம் வழங்கப்படும். பிறகு முகவர் மற்றும் தரகர்கள் தலைமறைவாகிவிடுவர். குழந்தைபற்றிய எந்த விவரமும் தெரியாமல் பெற்றோர் காவல்நிலையம் சென்றாலும், பல ஆண்டுகளானாலும் குழந்தை திரும்பக் கிடைக்காது.

சில குழந்தைகளை “திருமணம்” என்கிற போர்வையில் கட்த்தி விடுவர். ஏழைப் பெற்றோரிடம், ஒரு மணமகனை அறிமுகப்படுத்தி, எல்லா திருமணச் செலவையும் மாப்பிள்ளை வீட்டாரே ஏற்றுக் கொள்வர் எனப் பேசி, போலி அடையாள/வாக்காளர் அட்டைகளைக் காண்பித்து திருமணத்தை நடத்தி குழந்தையுடம் தப்பி விடுவர்.
இவ்வாறு கடத்தப்படும் குழந்தைகள் விபச்சார விடுதிக்கும், வீட்டுவேலைச் செய்யக் கொத்தடிமையாகவும் விற்கப்பட்டு விடுவர்.

கடத்தல்காரர்கள் இது போன்ற கடத்தலுக்கு பெண்களைத் தான் முக்கிய இலக்காகக் கொண்டாலும், சிறுவர்களையும் கடத்தி இனிப்புக் கடைகள் மற்றும் செங்கல் உலைகளுக்குக் கொத்தடிமைகளாக விற்று விடுவர்.

அரசு சாரா தன்னார்வத் தொண்டு அமைப்பான “சேவ் தி சில்ரன் (குழந்தைகளைக் காப்போம்) இவ்வாறு குழந்தைகள் கடத்தப்படுவதைத் தடுக்க அரசு உதவியுடன் 14-18 வயது குழந்தைகளுக்குப் பயிற்சி அளித்து, தன் சக வயது குழந்தைகள் வேலைக்கு அல்லது திருமண ஏற்பாடு செய்யப்பட்டால், உடனே களத்தில் இறங்கி, குழந்தை கடத்தும் முகவர்கள் அல்லது தரகர்களிடமிருந்து குழந்தைகளைக் காக்கின்றனர். இவ்வாறு ஒரு குழுவில் 15-20 குழந்தைகள் உள்ளனர். இவ்வாறு பலக் குழந்தைகள் குழு எல்லா கிராமங்களிலும் இயங்கிவருகின்றது. இவர்கள், ஊருக்குள் ஏதாவது மனிதர் “வேலைக்கு ஆள் வேண்டும், திருமணத்திற்கு பெண் வேண்டும் என நுழைந்தால் போதும், உடனே கிளம்பிச் சென்று அவரிடம், பல குறுக்குக் கேள்விகளைக் கேட்டு அவரின் தில்லுமுல்லுவைக் கண்டுபிடித்து ஓட ஓட விரட்டியுள்ளனர்.
மேற்கு வங்காள அரசு செயல்படுத்தப்பட்டு வருகின்ற “ ஒருங்கிணைந்த குழந்தைகள் பாதுகாப்புத் திட்டத்தின் கிராம அளவிலான அமைப்புடன் இணைந்து இந்த என்.ஜி.ஓவின் குழந்தைகள் குழு சிறப்பான பணியினை மேற்கொண்டு வருகின்றனர். இந்தப் பகுதியில் இதுவரை முப்பத்தி ஐந்து கிராமங்களில் குழந்தை தொழிலாளிகள் (கடத்தல் மூலம் ஈடுபட்டு) இல்லாத கிராம்மாக அறிவிக்கப்பட்டுள்ளன.

மேற்கு வங்க தெற்கு 24 பர்கானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்தவர் கீதா*, வயது 15. இவர் திருமணம் எனும் பெயரில் கடத்தப்பட்டு டெல்லியில் ஆறு மாதம் ஒரு இருட்டு அறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்து மீட்கப்பட்டவர். இவர் தினமும் தனது வயதை ஒத்த குழந்தைகளுடன் இணைந்து, தனது கிராமத்தில் ரோந்துப்பணியில் ஈடுபடுகின்றார். இவரது குழு விழிப்புடன் இருந்து, பல கடத்தல்களை நிறுத்தியுள்ளனர். சில நேரங்களில் பெற்றோரையும் மிரட்டிக் குழந்தைத் திருமணத்தை நிறுத்தியுள்ளனர்.

மொலி கிராமத்தில பிரியா* (17 வயது) ஒரு மேல்நிலை பள்ளி மாணவி, ஒரு 14 குழந்தைகள் கொண்ட குழுவினை வழிநடத்துகின்றார். ஒரு மனிதன், ஒரு பெண்ணைத் தில்லியில் ஒரு வேலை வாங்கித் தருவதாகக் கூறி கடத்த முயன்றதை வெற்றிகரமாகத் தடுத்தி நிறுத்தினர். தேசிய பெண் குழந்தை தினத்தில், இவருக்கு மாநில அரசு விருது வழங்கிச் சிறப்பித்தது.
இந்தப் பரிசு தங்களை மேலும் விழிப்புடன் இருந்து குழந்தைக் கடத்தலைத் தடுக்க ஊக்கப்படுத்துவதாகக் கூறினார், கோப்பையைப் பெருமிதத்துடன் முத்தமிட்டப்படி.