சென்னை:  2023-2024ம் ஆண்டு திமுக ஆட்சியில்  தமிழ்நாட்டில் இளம்வயது கர்ப்பம் 14,360 ஆக உயர்ந்துள்ளது.  கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதம் அதிகரித்து உள்ளது  என ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி ஓபிஎஸ் விமர்சனம் செய்துள்ளார்.

தமிழ்நாட்டில் டீனேஜ் கர்ப்ப விகிதம் 2019-20 இல் 1.1% லிருந்து 2023-24 இல் 1.5% ஆக உயர்ந்துள்ளது என்று தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 20 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

தமிழகத்தில் இளம் பருவத்திலேயே பெண்கள் கர்ப்பம் தரிப்பது அதிகரித்து வருவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. வளர்ந்து வரும் விஞ்ஞானத்தை தவறாக பயன்படுத்துவதால், அதனால் ஏற்படும் இழப்பும் அதிகமாக இருக்கிறது. இதன் காரணமாக  சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலான  பெரும்பாலோனோர் பாலியல் ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகி வருவதாகவும், இதனால், திருமண வயதை எட்டும் முன்னரே தவறான பழக்க வழக்கத்தால், படிக்கும் மாணவ மாணவிகள்,  இளம்பெண்கள் பாலியல் உறவில் ஈடுபடுவது  அதிகரித்து  இருப்பதாக வெளியாகும் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்நாட்டில் திமுக ஆட்சியில் இளம்வயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக விமர்சித்துள்ள முன்னாள் முதல்வர் ஓபிஎஸ், இதுகுறித்து வெளியிட்டுள்ள  அறிக்கையில்,  2023-2024ம் ஆண்டில் இளம்வயது கர்ப்பம் 14,360ஆக உயர்ந்துள்ளது என்றும், இது கடந்த அதிமுக ஆட்சி காலத்தைவிட 20 சதவிகிதம் அதிகம் என்று ஆய்வறிக்கையை சுட்டிக்காட்டி   விமர்சனம் செய்துள்ளார்.

பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024ம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வயது வரையிலான 14,360 பெண்கள் கருத்தரித்து இருக்கிறார்கள் என்றால், சட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது என்று  ஓ.பன்னீர்செல்வம் கேள்வியெழுப்பியுள்ளார்.

“அளவான குடும்பத்தின் முக்கியத்துவம், பாலின சமத்துவம், பிறப்புகளுக்கு இடையே போதிய இடைவெளி, திருமண வயதை உயர்த்துதல், இளவயது கர்ப்பம் ஆகியவை குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது மாநில அரசின் கடமை. மருத்துவக் குறியீடுகளில் தமிழ்நாடு முன்னிலையில் இருந்து வருகின்ற நிலையில், கடந்த ஐந்தாண்டுகளில் இளவயது கர்ப்பம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதார ஆய்வறிக்கை தெரிவித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த ஐந்தாண்டுகளில், கருத்தரித்த தாய்மார்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்து இருந்தாலும், இளவயது கர்ப்பம் அதிகரித்து இருக்கிறது. 2019-2020 ஆண்டில் 11,772 என்ற எண்ணிக்கையில் இருந்த இளவயது கர்ப்பம், 2023-2024ம் ஆண்டில் 14,360 ஆக உயர்ந்துள்ளதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது. அதாவது, 20 விழுக்காடு அதிகரித்துள்ளது.  2023-2024ம் ஆண்டில் கருத்தரித்த தாய்மார்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கையில் 1.5 விழுக்காடு இளவயது கர்ப்பம் என்பது மிக அதிகம்.

இளம் வயது திருமணம், இளம் வயதில் திருமணம் செய்துகொள்ள தரப்படும் சமுதாய மற்றும் சமூக அழுத்தம், பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம் குறித்த தகவலின்மை ஆகியவை இளவயது கர்ப்பத்திற்கு காரணங்களாகும். இளவயது கர்ப்பம் என்பது சுகாதார வளர்ச்சியை கடுமையாக பாதிக்கும் என்பதோடு மட்டுமல்லாமல் தாய்மார்கள் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். இது மட்டுமல்லாமல், இருபது வயதிற்கு மேற்பட்ட தாய்மார்களுக்கு பிறக்கும் குழந்தைகளுடன் ஒப்பிடுகையில், இளவயதினருக்கு பிறக்கும் குழந்தைகளின் உயிரிழப்பு 50 விழுக்காடு அதிகம் என்றும் கூறப்படுகிறது.

பெண்ணின் திருமண வயது குறைந்தபட்சம் 18 என்று இருக்கின்ற நிலையில், 2023-2024ம் ஆண்டில் மட்டும் 13 முதல் 19 வரையிலான 14,360 பெண்கள் கருத்தரித்து இருக்கிறார்கள் என்றால், சட்டம் சரியாக செயல்படுத்தப்படுகிறதா என்ற சந்தேகம் எழுகிறது.

எனவே, இது குறித்த விழிப்புணர்வை பள்ளிகளிலும், பொதுமக்களிடமும் ஏற்படுத்தி, இளவயது கர்ப்பத்தை தடுத்து நிறுத்த திமுக அரசு முன்வர வேண்டும் என்று அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழுவின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” .

இவ்வாறு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக தமிழ்நாடு பொது சுகாதாரம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி இதழின் சமீபத்திய ஆய்வில் வெளியான ஆய்வறிக்கையில்,  தமிழ்நாட்டில் டீனேஜ் கர்ப்ப விகிதம் 2019-20 இல் 1.1% லிருந்து 2023-24 இல் 1.5% ஆக உயர்ந்துள்ளது என்று  தெரியவந்துள்ளது.

சுகாதார மேலாண்மை தகவல் அமைப்பு (HMIS) போர்ட்டலில் இருந்து தரவைப் பயன்படுத்தி நடத்தப்பட்ட இந்த ஆய்வு, ஏப்ரல் 2019 முதல் மார்ச் 2024 வரை 49.93 லட்சத்திற்கும் அதிகமான பிரசவத்திற்கு முந்தைய தாய்மார்களின் பதிவுகளை ஆய்வு செய்தது. இவற்றில், 62,870 டீனேஜர்கள் அடையாளம் காணப்பட்டனர், இது ஒட்டுமொத்த டீனேஜ் கர்ப்ப விகிதத்தை 1.3% ஆகக் குறைத்தது.

மாநிலத்தில் ஆண்டுதோறும் டீனேஜ் கர்ப்ப விகிதங்கள் ஏற்ற இறக்கமாகவே இருந்து வருகின்றன, 2019-20 ஆம் ஆண்டில் 1.1%, 2020-21 இல் 1.3%, 2021-22 இல் 1.3%, 2022-23 இல் 1.1% மற்றும் 2023-24 இல் 1.5%. ஆக அதிகரித்துள்ளது.

நாகப்பட்டினத்தில் அதிகபட்ச விகிதம் 3.3%, அதைத் தொடர்ந்து தேனியில் 2.4% மற்றும் பெரம்பலூர் 2.3%. சேலம் மற்றும் மதுரை போன்ற பகுதிகளில் 3,000 க்கும் மேற்பட்ட டீனேஜ் கர்ப்பங்கள் பதிவாகியுள்ளன, அதே நேரத்தில் காஞ்சிபுரம், சிவகங்கை, விருதுநகர், நாகர்கோவில் மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் தலா 1,000 க்கும் குறைவான வழக்குகள் பதிவாகியுள்ளன.

வரலாற்று ரீதியாக, தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பு (NFHS) தமிழ்நாட்டில் NFHS-3 (2005-06) இல் 8% டீனேஜ் கர்ப்ப விகிதங்களைக் குறிப்பிட்டது, இது NFHS-4 (2015-16) இல் 5% ஆகக் குறைந்து, NFHS-5 (2019-20) இல் 6.3% ஆக சற்று உயர்ந்தது.

இதுகுறித்து ஆய்வு செய்த  விஜய்குமார் மற்றும் நிர்மல்சன் ஆகியோரின் ஆய்வுகள், டீனேஜ் கர்ப்பங்களுக்கு பங்களிக்கும் பல முக்கிய காரணிகளை அடையாளம் கண்டுள்ளது,

அவற்றில் ஆரம்பகால திருமணம், சமூக அழுத்தங்கள், பாலியல் துஷ்பிரயோகம், கல்வி இல்லாமை மற்றும் மோசமான சமூக பொருளாதார நிலைமைகள் ஆகியவை அடங்கும்.

இந்தப் போக்குகளைக் கண்காணித்து, ஆதார அடிப்படையிலான கொள்கைகளைச் செயல்படுத்துவதற்கான தொடர்ச்சியான முயற்சிகளின் முக்கியத்துவத்தை ஆராய்ந்து அதை நடைமுறைப்படுத்த  அரசு முயற்சிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

மேலும் டீனேஜர்களுக்கு  பாலியல் மற்றும் இனப்பெருக்க ஆரோக்கியம், கருத்தடை மற்றும் ஆரம்பகால கர்ப்பத்தின் சாத்தியமான விளைவுகள் குறித்து  கல்வி கற்பிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்தும் வலியுறுத்தி உள்ளது.

டீனேஜர்கள் தகவலறிந்த தேர்வுகளைச் செய்யவும், எதிர்பாராத கர்ப்பங்களைத் தடுக்கவும் உதவும் மலிவு விலையில் கருத்தடை முறைகளுக்கான அணுகலை அதிகரிக்க வேண்டும் என கூறியுள்ள ஆய்வாளர்கள்,   இளம் பருவ இனப்பெருக்க மற்றும் பாலியல் சுகாதாரம் (ARSH) திட்டம், கிஷோரி சக்தி யோஜனா (KSY), இளம் பருவ நட்பு சுகாதார மருத்துவமனைகள் (AFHC) மற்றும் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் போன்ற தற்போதைய திட்டங்கள் முன்னேற்றம் அடைந்துள்ளன, ஆனால் நடத்தை மாற்றம், பள்ளி சார்ந்த பாலியல் கல்வி மற்றும் சமூக பங்கேற்பு ஆகியவற்றில் மேலும் முக்கியத்துவம் அளித்து இந்தப் பிரச்சினையை திறம்பட நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளது.