சென்னை

டெட் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் நடத்தி வரும் தொடர் உண்ணாவிரதத்தை அமைச்சர் அளித்த உறுதிமொழியை ஏற்றுத் திரும்பப் பெற்றுள்ளனர்

சென்னை டிபிஐ வளாகத்தில் ‘டெட்’ தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களுக்கு மீண்டும் ஒரு போட்டித் தேர்வு நடத்த வகை செய்யும் அரசாணையை ரத்து செய்யக் கோரியும், ‘டெட்’ தேர்ச்சி அடிப்படையில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் ‘டெட்’ தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கடந்த செவ்வாய்க்கிழமையன்று தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினர். இந்த போராட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  சில அரசியல் கட்சித் தலைவர்கள் அவர்களுக்கு நேரில் சென்று ஆதரவு தெரிவித்தனர்.

நேற்று காலை ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றோர் நலச் சங்க மாநில தலைவர் கபிலன் சின்னசாமி, துணைத் தலைவர் மு.வடிவேலன், மாநிலச் செயலாளர் ம.க.கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகளைத் தலைமைச் செயலகத்துக்கு அழைத்து உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி பேச்சுவார்த்தை நடத்தினார்.  மேலும், மாலை டிபிஐ வளாகத்துக்கு நேரில் சென்ற அவர், ஆசிரியர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது அவர் டெட் ஆசிரியர் நியமன முறை தொடர்பாக 10 நாளில் முடிவு அறிவிக்கப்படும். எனவே, போராட்டத்தைக் கைவிடுமாறு கேட்டுக்கொண்டார்.  ஆசிரியர்கள், அமைச்சரின் உறுதிமொழியை ஏற்று, தங்கள் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தனர். நேற்று அவர்களின் 5 நாள் போராட்டம்  முடிவுக்கு வந்துள்ளது.