பெங்களூரு

ந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்காத பாஜகவுக்கு தெலுங்கு மக்கள் வாக்களிக்க வேண்டாம் என ஆந்திர துணை முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கோரி ஆந்திராவை ஆளும் தெலுங்கு தேசம் கட்சி போராடி வருவது தெரிந்ததே.    மத்திய கூட்டணி அரசில் இருந்த தங்கள் அமைச்சர்களை தெலுங்கு தேசம் விலக்கிக் கொண்டுள்ளது.   மேலும் பாராளுமன்ற இரு அவைகளிலும் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள் நடத்தும் போராட்டத்தினால் பாராளுமன்ற அலுவல்கள் முடங்கிப் போய் உள்ளன.

நேற்று ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தி நேற்று ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர், “ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்காததால் தெலுங்கு பேசும் மக்களுக்கு நரேந்திர மோடி அநீதி இழைத்து விட்டார்.   அதனால் கர்நாடகா, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலத்தில் வசிக்கும் தெலுங்கு பேசும் மக்கள் அனைவரும் பாஜகவுக்கு வாக்களிக்கக் கூடாது.

மேலும் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு இது போல சர்வாதிகார மனப்பான்மையை தொடர்ந்தால் அது வட இந்தியாவுக்கும் தென் இந்தியாவுக்கும் இடையில் வேறுபாட்டை உண்டாக்கும்.    இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு நல்லது இல்லை” என  தெரிவித்தார்.

அரசியல் நோக்கர்களில் பலர் கர்நாடக சட்டமன்ற தேர்தலில் பாஜக வை தோற்கடிக்க தெலுங்கு தேசம் தயாராக உள்ளதாக தெரிவித்துள்ளனர்.   தற்போது துணை முதல்வர் கிருஷ்ண மூர்த்தியின் இந்த பேச்சு அதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.