கொலம்பியா:

மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு அமல்படுத்திய பண மதிப்பிழப்பும், ஜிஎஸ்டியும் தோல்வி அடைந்து விட்டதாக பாஜக மூத்த உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி  ஆசிய வர்த்தக அமைப்பு மாநாட்டில் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார்.

இது பாஜகவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பிசினஸ் ஸ்கூலில் தெற்கு ஆசியா வர்த்தக அமைப்பு சார்பில் 14-வது ஆண்டு வர்த்தக மாநாடு நடைபெற்றது.

இந்த மாநாட்டில், பாஜகவை மூத்த தலைவர்களில் ஒருவரான  சுப்பிரமணியன் சுவாமி பங்கேற்று சிறப்புரை ஆற்றினார். அவர் கூறியதாவது,

பிரதமர் மோடி தலைமையில் பாஜக 2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் மீண்டும் மிகப் பெரியவெற்றி பெறும் என்றும் தெரிவித்தவர்,  ஊழலுக்கு எதிராகப் போராடவும், மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை அறிவுறுத்தவும், மூன்றாவதாக, இந்தியாவில் இந்துக்களின் நலனை பாதுகாப்பதற்காக ஆட்சிக்கு வர வேண்டும் என்றும் கூறினார்.

மேலும், மோடி தலைமையிலான ஆட்சி பதவி ஏற்றபிறகு, நாடு முழுவதும் ஊழல்கள் ஒழிந்துவிட்டது என்றும், 2019ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வந்தால், மீதமுள்ள ஊழல்களும் குறைந்துவிடும் என்றும் கூறினார்.

மேலும், கடந்த. 2014-ம் ஆண்டு ஆட்சிக்கு  வரும்போது, நாட்டின் பொருளாதாரத்தை உயர்த்துவதாக வாக்குறுதிகளை பாஜ அளித்தது. ஆனால், பொருளாதார வளர்ச்சி இன்றளவும் பின்தங்கியே இருக்கிறது என்று குற்றம்  சாட்டியவர், பாஜக அரசு அமல்படுத்திய பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி மேலும் சிக்கலாக்கி விட்டன என்றும் கூறினார்.

பாஜக அரசு கொண்டு வந்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை, பொதுமக்களை பற்றி சிந்திக்காமல், எடுக்கப்பட்ட நடவடிக்கை என்று குற்றம் சாட்டியவர், அது  மிகப்பெரிய தோல்வி என்றும், இந்த நடவடிக்கை காரணமாக பணக்காரர்கள் மட்டுமே பலன் பெற்றனர் என்றும் கூறினார்.

அதுபோலவே கடந்த ஆண்டு அமல்படுத்திய ஜிஎஸ்டி வரியும் என்று குற்றம் சாட்டியவர், அதுகுறித்து, மக்களை யும், மற்ற அமைப்புகளையும், வர்த்தக நிறுவனங்களையும் முன்கூட்டியே தயார் படுத்தி இருக்க வேண்டும் என்றும், ஆனால், அதற்கான முயற்சியை மேற்கொள்ளாமல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது என்றும்,   2019-ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்கு முன்பாக ஜிஎஸ்டிவரியை நடைமுறைப்படுத்தி இருக்க கூடாது என்று கூறினார்.

மேலும், வரும் 2019ம் ஆண்டில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால்,  குறிப்பாக நாட்டின் வளர்ச்சி 10 சதவீதத்தை எட்டும் அளவுக்கு திட்டங்கள் வகுக்கப்படும் என்றும், இந்தியாவை உலகில் சிறந்த பொருளாதார வல்லரசாக மாற்ற முயற்சி எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களாக இந்தியாவில் நடைபெற்று வரும்  வங்கி மோசடி குற்றங்கள் இந்தியாவின் மாண்பை கெடுக்கும் வகையில் உள்ளதாகவும், இது  அதிகரிக்க அரசியல்வாதிகளும், வர்த்தகர்களும் கூட்டாக இணைந்து செயல்படுவதுதான் காரணம் என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், வங்கி மோசடியில், வங்கியின் கிளார்க்கை பிடித்து விசாரணை செய்வதற்கு பதிலாக, பணத்தை கொள்ளையடித்துச் சென்ற உயர்ந்த இடத்தில் இருக்கும் நபர்களைத்தான் பிடிப்பதில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போதுதான் ஊழலை படிப்படியாக குறைக்க முடியும்

இவ்வாறு சுப்பிரமணியசுவாமி பேசினார்