பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வு நாளுக்கு நாள் மக்களை வாடி வதைத்து வருகிறது.

மக்களின் மனநிலை நடந்து முடிந்த 14 மாநில சட்டசபை மற்றும் பாராளுமன்ற இடைத்தேர்தலில் மத்தியில் ஆளும் பாஜக-வுக்கு எதிராக எதிரொலித்தது.

இதனைத் தொடர்ந்து, பெட்ரோல் டீசல் மீதான கலால் வரியை குறைப்பதாக மத்திய அரசு இன்று அறிவித்துள்ளது, இதனால் பெட்ரோல் விலை 5 ரூபாயும் டீசல் விலை 10 ரூபாயும் குறையும்.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து தற்போது ரூ. 32.90 மற்றும் ரூ. 31.80 ஆகவும் இருந்த கலால் வரி இனி பெட்ரோலுக்கு 27.90 ரூபாயாகவும் டீசலுக்கு 21.80 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

2014-ம் ஆண்டு ரூ. 9.48 மற்றும் ரூ. 3.56 ஆக இருந்த பெட்ரோல் மற்றும் டீசலுக்கான கலால் வரி 2017 ம் ஆண்டு முறையே ரூ. 19.48 மற்றும் ரூ. 15.33 ஆக இருந்தது.

எரிபொருள் மீதான வரி 2014 ம் ஆண்டு இருந்ததை விட 194 சதவீதம் அதிகரித்துள்ளது.

2020 – 21 ம் நிதியாண்டில் மட்டும் மத்திய அரசுக்கு பெட்ரோலிய பொருட்களின் மீதான கலால் வரி ரூபாய். 3.44 லட்சம் கோடி வசூலானதாக கூறப்படுகிறது.

மோடி அரசின் முந்தைய ஆட்சி காலத்தில், அதாவது 2017 ல் வசூலித்த வரியை விட தற்போது 48 சதவீதம் வரி உயர்ந்திருப்பதால், பெட்ரோலிய பொருட்களின் மீதான விலையை மேலும் குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.