போதை மருந்து பயன்படுத்தியதாக அக்டோபர் மாதம் 3-ம் தேதி ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் மும்பையில் கைது செய்யப்பட்டார்.

மும்பையில் இருந்து கோவா சென்ற சொகுசு கப்பலில் நடந்த இரவு விருந்தில் கலந்து கொண்ட ஆர்யன் கான் போதை மருந்தை வாங்கி தனது நண்பர் அர்பாஸ் மெர்ச்சென்டிடம் கொடுத்து வைத்திருந்தார்.

ஆர்யன் கானுக்கும் வெளிநாட்டு போதை மருந்து கடத்தல்காரர்களுக்குமான தொடர்பு குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதால் அவரை ஜாமீனில் விடக்கூடாது என்று போதை பொருள் தடுப்புப் பிரிவு போலீசார் கூறிவந்தனர்.

ஜெயிலில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் அக்டோபர் மாதம் 30 ம் தேதி ஜாமீனில் விடுதலை ஆனார்.

இந்நிலையில், ஆர்யன் கான் ஜெயிலில் இருந்த நேரத்தில் அக்டோபர் 14-ம் தேதி ஷாருக்கான் மற்றும் கவுரி கான் ஆகியோருக்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடிதம் எழுதிய விவரம் இப்போது தெரியவந்திருக்கிறது.

அந்தக் கடிதத்தில் “எந்தக் குழந்தையையும் இதுபோன்று நடத்தக்கூடாது. மக்களுக்காக நீங்கள் செய்த நற்பணிகள் குறித்து நான் அறிவேன். அவர்களின் ஆசீர்வாதமும், நல்லெண்ணமும் உங்களுக்கு எப்போதும் துணையிருக்கும்.

உங்களுக்கு ஏற்பட்டிருக்கும் இந்த நிலைமைக்காக நான் வருந்துகிறேன். விரைவில் உங்கள் மகனுடன் ஒன்றாக சேர்ந்திருக்க வேண்டும் என்று விழைகிறேன்” என்று ராகுல் காந்தி குறிப்பிட்டிருந்தார் என்று இந்தியா டுடே செய்தி வெளியிட்டிருக்கிறது.