டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களுக்கு இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு தகுதியான 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது.

இந்திய வாகன உற்பத்தியாளர்கள் தங்கள் வாகனத் தொழில் தரநிலை (Automotive Industry Standard – AIS) -யை சோதனை செய்வதை நோக்கமாகக் கொண்டு துவங்கப்பட்டுள்ள பாரத் என்சிஏபி (Bharat NCAP) இந்த சான்றை வழங்கியுள்ளது.

சர்வதேச புதிய கார் மதிப்பீட்டு திட்டம் (Global New Car Assessment Programme -Global NCAP)-க்கு நிகராக இந்திய கார் நிறுவனங்களின் தர பரிசோதனை செய்யும் திட்டத்தை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிமுகப்படுத்தினார்.

இந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்பாட்டிற்கு வந்திருக்கும் இந்த Bharat NCAP தர பரிசோதனையில் :

முன்பக்க விபத்து சோதனையானது மணிக்கு 64 கிமீ வேகத்தில் நடத்தப்படும். பக்கவாட்டு மற்றும் பின்பக்க தாக்க சோதனைகள் முறையே மணிக்கு 50 கி.மீ. மற்றும் மணிக்கு 29 கி.மீ. வேகத்தில் சோதனை செய்யப்படும்.

இது தவிர, பாரத் NCAP ஆனது ஆறு ஏர்பேக்குகள் (Airbags), எலக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC), ஒவ்வொரு பயணிக்கும் இருக்கை பெல்ட்கள், மேம்படுத்தப்பட்ட அவசரகால பிரேக்கிங் சிஸ்டம் போன்றவற்றையும் கட்டாயமாக்குகிறது.

பாரத் என்சிஏபி நெறிமுறைகள் மற்றும் சோதனை சிஎன்ஜி மற்றும் எலெக்ட்ரிக் கார்களின் செயல்பாட்டை மதிப்பிடுவதற்கும் பொருந்தும்.

இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் Global NCAP சோதனை முறைகளில் சிறிய மாற்றங்களுடன் Bharat NCAP அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

குளோபல் NCAP இல், பெரியவர்களுக்கான பாதுகாப்பில் ஒரு வாகனம் குறைந்தபட்சம் 34 புள்ளிகளைப் பெற வேண்டும் – முன் விபத்து சோதனைக்கு 16 புள்ளிகள், பக்க தாக்கத்திற்கு 16 புள்ளிகள் மற்றும் சீட்பெல்ட் நினைவூட்டல்களுக்கு 2 புள்ளிகள் என அதற்கான புள்ளிகளைப் பெற்றால் மட்டுமே 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற.முடியும்.

பாரத் என்சிஏபியில், 5-நட்சத்திர மதிப்பீட்டைப் பெற, ஒரு வாகனம் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் குறைந்தபட்சம் 27 புள்ளிகள் தேவை மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பில் 41 புள்ளிகள் தேவை.

குளோபல் என்சிஏபி போலல்லாமல், பாரத் என்சிஏபி பெரியவர்கள் மற்றும் குழந்தைகளுக்கான விபத்து சோதனை முடிவுகளை ஒருங்கிணைத்து வாகனங்களுக்கு ஒரு ஒருங்கிணைந்த மதிப்பீட்டை வழங்குகிறது.

இந்த நிலையில் முதல்முறையாக நடத்தப்பட்ட பாரத் என்சிஏபி தரப்பரிசோதனையில் டாடா நிறுவனத்தின் ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களுக்கு இந்திய சாலைகளில் ஓட்டுவதற்கு தகுதியான 5 ஸ்டார் ரேட்டிங் வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.