அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு தனது இந்திய கார் தொழிற்சாலைகளை 2021 செப்டம்பர் மாதம் மூடியது.

குஜராத் மாநிலத்தின் சனன்த் மற்றும் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்த மறைமலைநகரில் இருக்கும் அதன் தொழிற்சாலைகள் மூடப்பட்டதை அடுத்து அவற்றை விற்கும் முயற்சியில் இறங்கியது.

இந்தியாவின் மிகப்பெரிய தொழில்நிறுவனமான JSW இந்த தொழிற்சாலையை வாங்க பேச்சுவார்த்தை நடத்தி வந்தது.

JSW-MG கார் தயாரிப்பு நிறுவனத்திற்காக ஃபோர்டு நிறுவனத்தின் தொழிற்சாலையை வாங்க இருந்த நிலையில் அந்த பேச்சுவார்த்தை முறிந்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து வெளியேறும் முடிவை ஃபோர்டு நிறுவனம் மறுபரிசீலனை செய்துவருவதாகவும் சென்னை ஆலையைத் தக்கவைத்து, இந்திய மற்றும் உலக சந்தைக்கான கார்களை உற்பத்தி செய்வதை மீண்டும் தொடங்கலாம் என்றும் கூறப்படுகிறது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு JSW நிறுவனத்தின் தலைவர் சஜ்ஜன் ஜிண்டால் மீது பாலியல் புகார் எழுந்ததை அடுத்து திங்களன்று (டிச. 18) அந்நிறுவனத்தின் பங்குகள் பங்குச்சந்தையில் கடும் வீழ்ச்சி அடைந்தது.

இந்த நிலையில் ஃபோர்டு நிறுவனத்துடனான பேச்சுவார்த்தை முறிந்திருப்பதாக தகவல் வெளியாகியிருப்பது குறிப்பிடத்தக்கது.