நெட்டிசன்
மூத்த பத்திரிகையாளர் ஏழுமலை வெங்கடேசன் முகநூல் பதிவு….
என்ன தவம் செய்தோம், முத்துசாமி அவர்களே ..
மது அருந்திவிட்டு வேலைக்கு போகிறார்களே என்ற நடப்பு நிலவரத்தை கேட்டவுடன் துடிதுடித்துப் போயிருக்கவேண்டும். இப்படி மதுவுக்கு அடிமையாகி போய்விட்ட ஒரு சமூகத்தை எப்படி மீட்டெடுக்க போகிறோம் என்ற கவலை வரவேண்டும், சமூக அக்கறையோடு அதற்கான திட்டங்களை பற்றி பேசி இருக்க வேண்டும்.
ஆனால் அவர்களுக்கு காலையிலேயே மதுவை எப்படி விநியோகிப்பது என்பதில் தான் அக்கறை காட்டுகிறார் நமது மாநிலத்தின் அமைச்சரான எஸ். முத்துசாமி அவர்கள்.
எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்து பல சாதனைகளைப் படைத்தவர் முத்துசாமி.
கட்சி பேதம் இன்றி இப்படி ஒரு அமைச்சரா என்று தொழிற்சங்கத்தினரே வியக்கும் அளவுக்கு அனைவரையும் அரவணைத்து சென்று போக்குவரத்து கழகங்களை நடத்தியவர். அத்தகைய அனுபவமிக்க முத்துசாமி கடைசியில் மதுபான விநியோகத்தில் இப்படி எல்லாம் பேசுவது காலத்தின் அலங்கோலம் என்று சொல்வது தவிர வேறு என்னவாக இருக்க முடியும்?
காலை 7 மணி முதல் 9 மணி வரை மதுக்கடைகளை திறப்பது என்ற கோரிக்கை பற்றி பரிசீலனை என்று சொல்கிறார் அமைச்சர்.
அதைவிட கொடுமை பக்கத்திலேயே அமர்ந்து கொண்டு அவரின் பேச்சை ஆரவாரமாக ரசிக்கிறார் உள்துறை செயலாளரான அமுதா.
காலையிலேயே மது கடைகள் திறப்பு என்கிற விவகாரம் வரும்போது இங்கே எலைட் வாதம் ஒன்று முன் வரலாம்.
சர்வதேச விமானங்கள் இயங்கும் நகரங்களில், வெளிநாட்டினரின் நலனை கருதி சில ஹோட்டல்களில் 24 மணி நேரமும் பார் செயல்படுவதற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேல் தட்டு மக்களுக்கு கிடைக்கும் அந்த சலுகை, ஏன் உழைக்கும் அடித்தட்டு மக்களுக்கு கிடைக்கக்கூடாது என்று கேட்கலாம். பாட்டாளி வர்க்கத்துக்கு எதிராக ஏன் செயல்படுகிறீர்கள் என்று கூட பொங்கலாம்.
உலகம் முழுவதும் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு கொஞ்சம் ரிலாக்ஸாக இருப்பதற்குத் தான் மது அருந்துவார்கள்.
ஆனால் மது அருந்தி விட்டுத்தான் வேலைக்கே போக முடியும் என்ற நிலை உருவாகுமேயானால், அந்த நிலைப்பாட்டுக்கு உதவுவதில் என்ன தவறு என்று ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசும் போகுமேயானால்,
கேடுகாலம், வெகு தொலைவில் இல்லை, தமிழ்நாட்டுக்கும்தான்..