சென்னை: தமிழ்நாடு அரசு நடத்தும் டாஸ்மாக் கடைகளில் பிப்ரவரி 1ந்தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்த் தப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. குவார்ட்டருக்கு 10 ரூபாய்  முதல்  ரூ.80 வரை விலை உயருகிறது.

தமிழ்நாடு அரசின் முக்கிய நிதியே டாஸ்மாக் வருமானம் என கூறப்படுகிறது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.45 ஆயிரம் கோடி வரை வருமானம் வருகிறது. தமிழக  மக்களை குடிகாரர்களாக்கி அவர்கள் மூலம் கிடைக்கும் வருமானத்தைக்கொண்டே அரசு செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் 2023 ஜூன் மாத கணக்குப்படி, 5,329 மதுக்கடைகளும், 3,240 பார்களும் அரசு அனுமதியுடன் இயங்கி வருகின்றன. ஆனால், அரசு அனுமதியின்றி ஆயிரக்கணக்கான பார்களும், திருட்டுத்தனமான மது விற்பனை நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன. இதன்மூலம் மாணவர் சமுதாயம் முதல் ஏழை எளியோர், ஊழைப்பாளர்கள் என அனைத்து தரப்பினரும் குடிமகன்களாக மாறி வருகின்றனர்.

இதற்கிடையில் மக்களை கவர பல்வேறு இலவச அறிவிப்புகளை வாரி வழங்கும் திமுக அரசு, போதிய நிதி இல்லாமல் தள்ளாடி வருகிறது. இதனால்,  நிதி  வருவாயை பெருக்குவதற்கு டாஸ்மாக் மதுபானங்கள் விலையை  உயர்த்த முடிவு செய்து அறிவித்து உள்ளது.

அதன்படி குறைந்த பட்சம்  குவார்ட்டருக்கு 10 ரூபாய் உயர்த்த அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி பிராந்தி, விஸ்கி, ரம், ஜின், ஓட்கா உள்ளிட்ட மதுவகைகளின் விலை குவார்ட்டர் பாட்டிலுக்கு 10 ரூபாய் விரைவில் உயர உள்ளது. மேலும்,   ‘ஆப்’ பாட்டில், முழு பாட்டில் விலையும் ரூ.30 முதல் ரூ.80 வரை விலை உயருகிறது.

இந்த விலை உயர்வு நாளை மறுதினம், அதாவது  பிப்ரவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக  டாஸ்மாக் நிர்வாகம் அறித்துள்ளது.