கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் நஞ்சுண்டபுரம் என்னும் யானைகள் நடமாடும் பகுதியில் டாஸ்மாக் கடை திறக்க உள்ளதாக வந்த செய்தியால் மக்கள் கலக்கம் அடைந்துள்ள்னர்.

மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதிகளில் உணவு, தண்ணீர் தேடி யானைகள் நுழைவதும், அவ்வப்போது யானை தாக்கி உயிரிழப்புகள் ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.  தற்போது அதிகளவில் யானைகள் நடமாடும் எண்.22 நஞ்சுண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட, வரப்பாளையம் சாலை, ஸ்ரீநகர் பகுதியில் புதிய டாஸ்மாக் மதுபான கடையைத் திறக்க மும்முரமாக பணிகள் நடைபெற்று வருகின்றன எனக் கூறப்படுகிறது.

மக்கள் ”இந்த இடம் வன எல்லையில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தூரமே உள்ளது இங்கு மதுபான கடையை திறந்தால், குடிமகன்களால் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படும்” எனத் தெரிவித்துள்ளனர்,    இதைப் பற்றி வன உயிரின ஆர்வலர்கள், “மதுபான கடை அமைய உள்ள இடத்துக்கு அருகிலேயே ஒரு தனியார்ப் பள்ளி, மகளிர் கல்லூரி ஆகியவை உள்ளன. கடையைக் கடந்து சென்றால்தான் மகளிர் கல்லூரியை அடைய முடியும்.என்பதால் அவ்வழியாகக் கல்லூரிக்கு இருசக்கர வாகனங்களில் சென்று வரும் பெண்களுக்குப் பாதுகாப்பற்ற சூழல் ஏற்படும்.

மேலும் கடை அமைய உள்ள இடத்துக்குப் பின்புறத்திலேயே குடியிருப்பு பகுதியும் உள்ளது.  இது, யானைகள் நடமாடும் இடம் என்பதால் மது குடித்து விட்டு இரவில் நடந்து செல்வோர் யானை தாக்கி உயிரிழக்கவும்,, மதுபாட்டில்களை தூக்கி எறிந்துவிட்டுச் சென்றால், அவை உடைந்து யானைகளின் கால்களை பதம்பார்க்கவும் வாய்ப்புள்ளதால் இங்கு டாஸ்மாக் மதுபான கடை திறக்கும் முடிவைக் கைவிட வேண்டும்,” என்றனர்.

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, “இது குறித்து விசாரித்து நிச்சயம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.  இப்பகுதி டாஸ்மாக் அதிகாரிகள், “அங்கு மதுபான கடையைத் திறக்கலாமா என்பது குறித்து காவல்துறையிடம் அறிக்கை கேட்டுள்ளோம். அதன்பிறகே திறக்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளனர்.