சென்னை: டாஸ்மாக் பார்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளது.
தமிழகம் முழுவதும், டாஸ்மாக் சில்லறை மதுபான கடைகiள அரசே நடத்தி வருகிறது. அத்துடன் பார்களையும் டெண்டர் விடுத்து நடத்தி வருதடன், பார்களில் , தின்பண்டங்கள் விற்பனை மற்றும் காலி பாட்டில்களை சேகரிப்பதற்கு புது டெண்டர் அறிவிப்பை டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டது.
இதற்கு டாஸ்மாக் உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்குகளை விசாரித்த தனி நீதிபதி சி.சரவணன், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். அதேசமயம், தமிழ்நாடு மதுவிலக்கு சட்டப்படி, பார் நடத்த டாஸ்மாக்குக்கு அதிகாரம் இல்லாததால், தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளை ஒட்டி அமைக்கப்பட்டுள்ள பார்களை ஆறு மாதங்களுக்குள் மூட வேண்டும் என்றும் உத்தரவிட்டார். இது தமிழக அரசுக்கு அதிர்ச்சியை அளித்தது.
இதையடுத்து, தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து டாஸ்மாக் நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது. அதில், தமிழ்நாடு மதுபான சில்லறை விற்பனை விதிகளின் படி, டாஸ்மாக் கடைகளின் அருகில் பார்களுக்கு உரிமம் வழங்க டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரம் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பார்கள் நடத்த டாஸ்மாக் நிறுவனத்துக்கு அதிகாரமில்லை என தனி நீதிபதி மேற்கோள்காட்டிய மதுவிலக்கு சட்டப்பிரிவு, பார் உரிமம் வழங்கும் விஷயத்துக்கு பொருந்தாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
டாஸ்மாக் பார் டெண்டரை எதிர்த்து தான் வழக்கு தொடரப்பட்டதாகவும், டாஸ்மாக் கடைகள் அருகில் பார் அமைக்க கூடாது என எந்த வாதங்களும் முன் வைக்கப்படாத நிலையில், தனி நீதிபதி, பார்களை மூட வேண்டும் என பிறப்பித்த உத்தரவு தேவையற்றது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் எனவும், அந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த மேல் முறையீட்டு வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.