டெல்லி: கேரளா உள்பட காலியாக உள்ள 6 மாநிலங்களின் 13 எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் தேதிகளை அகில இந்திய தேர்தல் ஆணையம்  அறிவித்துள்ளது.

தற்போது ராஜ்யசபா உறுப்பினர்களாக உள்ள  ஆனந்த் சர்மா, ஏ.கே. ஆண்டனி, பர்தாப் சிங் பாஜ்வா, நரேஷ் குஜ்ரால் உள்பட 6 மாநிலங்களைச் சேர்ந்த 13 ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவி காலம், அடுத்த மாதம் முடிவடைகிறது. அதன்படி பஞ்சாபில் 5, கேரளாவில் 3, அசாமில் 2, ஹிமாச்சலப் பிரதேசம், திரிபுரா மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு இடங்கள் காலியாகவுள்ளது. இதையடுத்து, அந்த பதவிகளுக்கான தேர்தல் தேதிகளை அகில இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

இந்த 13 இடங்களுக்கும் மார்ச் 31-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்ய மார்ச் 21-ஆம் தேதி கடைசி நாளாகும். அதே சமயம், வேட்புமனுக்கள் மீதான பரிசீலனைக்கும், வேட்புமனுக்களை திரும்பப் பெறுவதற்கு மார்ச் 24 வரை அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. மார்ச் 31ம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது. மார்ச் 31ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், அன்றைய தினம் மாலை 5 மணி முதல் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.

மேலும், ஏப்ரல் 2ம் தேதிக்கு முன் இந்த நடவடிக்கையை முடிக்க வேண்டும் என்று ஆணையம் கூறியுள்ளது.  தேர்தல் மற்றும் வாக்குப்பதிவின் போது கொரோனா நெறிமுறையை பின்பற்றுமாறு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் அறிக்கைபடி, பஞ்சாப் மாநில ராஜ்யசபா உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 9 அன்று முடிவடைகிறது. மற்ற மாநில உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் 2 அன்று முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.