தஞ்சாவூரை அடுத்த மைக்கேல்பட்டியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக மதுரை நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பள்ளி விடுதியில் தங்கியிருந்த அரியலூரைச் சேர்ந்த மாணவி இந்த மாதம் 9 ம் தேதி விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார் உயிருக்கு போராடிய அவரை சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்த நிலையில் 19 ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கிறிஸ்துவ அறக்கட்டளை நடத்தும் பள்ளியில் பயின்ற மாணவி இறந்ததை அடுத்து அவரது மரணம் குறித்து சர்ச்சை கிளம்பியது.

பள்ளி நிர்வாகம் மாணவியை மதம் மாற வற்புறுத்தியதாகக் கூறப்பட்டதை அடுத்து பா.ஜ.க. உள்ளிட்ட சில அரசியல் கட்சிகள் போராட்டத்தில் குதித்தன.

மேலும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று மாணவியின் தந்தை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு ஆஜரான மனுதாரரின் வழக்கறிஞர் “மாணவி தரப்பு குற்றச் சாட்டுகளை தற்போதைய விசாரணை அமைப்பு கருத்தில் கொள்ளவில்லை.

சைபர் க்ரைம் தொடர்பான விசாரணை முக்கியம் தமிழகத்தில் உள்ள சைபர் க்ரைம் விசாரணை குழு மீது நம்பிக்கை இல்லை. எனவே இதனை சி.பி.ஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி இந்த வழக்கு தொடர்பான தீர்ப்பை வேறு தேதிக்கு ஒத்திவைத்தார்.