திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி கட்சி பதவியில் இருந்து நீக்கம்

Must read

சென்னை

திமுகவைப் புகழ்ந்த அதிமுக எம்பி நவநீத கிருஷ்ணன் அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

நவநீத கிருஷ்ணன் அதிமுகவின் மாநிலங்களவை உறுப்பினராகப் பதவி வகிப்பதுடன் அதிமுகவின் வழக்கறிஞர் பிரிவு செயலாளராகவும் பணியாற்றி வருகிறார்.  நேற்று திமுக எம்.பி.யும் அக்கட்சியின் செய்தித்தொடர்பு செயலாளருமான இளங்கோவனின் மகள் திருமணம் நேற்று அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நடைபெற்றது.

இந்த திருமணத்தைத் தமிழ்நாடு முதல்-அமைச்சரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் இந்த திருமணத்தை நடத்தி வைத்தார்.  அதிமுகவின் நவநீத கிருஷ்ணன் திமுக தலைமையிடமான அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற அந்த திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

திருமண நிகழ்ச்சியின் போது பேசிய நவநீத கிருஷ்ணன், “நான் மாநிலங்களவைக்கு நான் சென்றபோது எனக்குப் பல விஷயங்கள் தெரியாது.  எனக்கு டிகேஎஸ் இளங்கோவன், கனிமொழி (திமுக எம்.பி.க்கள்) உள்ளிட்டோர் நிறைய விஷயங்களை கற்றுக் கொடுத்தனர்’ எனத் தெரிவித்தார்.

அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் நவநீத கிருஷ்ணன் திமுக தலைமையிடத்தில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இவ்வாறு பேசிய நிகழ்வு தமிழ்நாடு அரசியலில் பெரும் பேசுபொருளானது.    இன்று அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருந்து நவநீத கிருஷ்ணன் நீக்கப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

இன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘அதிமுக வழக்கறிஞர் பிரிவு செயலாளர் பொறுப்பில் இருக்கும் நவநீத கிருஷ்ணன் எம்.பி. இன்று முதல் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More articles

Latest article