அருள்மிகு அப்பால ரங்கநாதர் சுவாமி திருக்கோவில்.
நம்மாழ்வார், பெரியாழ்வார், திருமிழிசையாழ்வார், திருமங்கையாழ்வார் ஆகியோரால் 33 பாடல்கள் பாடப்பெற்ற மகத்துவம் மிக்கதாக விளங்குகிறது தஞ்சாவூர் மாவட்டம், கோவிலடியில் உள்ள அப்பால ரங்கநாதர் கோவில். 108 திவ்ய தேசங்களில் இந்தக் கோவிலும் ஒன்று என்பது மேலும் பெருமை சேர்க்கிறது. இக்கோவில் பஞ்சரங்க தலங்களுள் ஒன்றாகும்.
சுவாமி : அப்பால ரங்கநாதர் (அப்பக் குடத்தான்).
அம்பாள் : ஸ்ரீமத் கமலவல்லி தாயார், இந்திரா தேவி.
மூர்த்தி : விநாயகர், நம்மாழ்வார், ராமானுஜர், ஆழ்வார்கள், கருடன், வேணுகோபாலன், விஷ்வக்சேனர்.
தீர்த்தம் : இந்திர புஷ்கரிணி.
தலவிருட்சம் : புரஷ மரம்.
தல வரலாறு : 
இத்தலத்திற்குப் பெருமாள் எழுந்தருளுவதற்கு முன்பே திருமகள் எழுந்தருளினார். வைகுண்டத்தில் ஒருநாள் காரசாரமான பட்டிமன்றம் நடந்தது. விவாதத்தின் தலைப்பு ‘இரு தாயார்களில் பெருமை மிக்கவர் யார்? ஸ்ரீதேவியா? பூமி தேவியா?” என்பதே! அதன் முடிவு பூமி தேவிக்குச் சாதகமாக அமைய, ஸ்ரீதேவி கோபித்துக் கொண்டு திருப்பேர் நகர் என்னும் கோயிலடிக்கு வந்து தவம் மேற்கொண்டார்.
அதனால் இவ்வூருக்கு ‘ஸ்ரீ நகர்” என்ற பெயர் ஏற்பட்டது. ஸ்ரீதேவிக்குக் காட்சியளித்த பெருமாள், பூமிதேவியைவிட நீயே உயர்ந்தவள் என்று ஆறுதல் கூறி, பிராட்டியை தன் திருமார்பில் சேர்த்துக் கொண்டார். பெருமாள் தன் மார்பில் ஸ்ரீதேவியைச் சூடிய தலம் இது.
இந்த கோவில் ஏறத்தாழ 2000 வருடம் தொன்மை வாய்ந்தது. 108 திருப்பதிகளுள் இத்தல பெருமாளுக்குத்தான் தினமும் இரவில் அப்பம் செய்து படைக்கப்படுகிறது. உபரிசிரவசுவிடம் இருந்து பெருமாள் அப்பக்குடத்தைப் பெற்றதால் இவருக்கு ‘அப்பக்குடத்தான்” என்ற திருநாமம் ஏற்பட்டது. இப்பெருமாளின் வலதுகையில் ஒரு அப்பக்குடத்தை அணைத்த வண்ணம் உள்ளது.
இந்திரனுக்குக் கர்வம் போக்கியும், மார்க்கண்டேயருக்கு எமபயம் போக்கியும், உபரிசிரவசு மன்னனுக்குச் சாபம், பாவம் போக்கியும் அருளிய தலம்.
நம்மாழ்வார் இத்தலத்தில் எழுந்தருளியுள்ள பெருமாளைக் கடைசியாக மங்களாசாசனம் செய்துவிட்டு இத்தலத்திலேயே மோட்சம் அடைந்தார் என்று நம்பப்படுகிறது. எனவே இத்தலம் வந்து வழிபடுவோருக்கு ‘வைகுண்ட வாசம் நிச்சயம்” என்பது ஐதீகம். ஐந்து ஸ்ரீரங்கங்களுள் இதுவும் ஒன்று. அதாவது, பெருமாள் சயனக் கோலத்தில் எழுந்தருளியிருக்கும் பஞ்ச ரங்க தலங்களில் இது இரண்டாவது தலமாக விளங்கி வருகிறது.
குழந்தை பாக்கியம், எமபயம் நீங்க, கர்வம் தீர, பாவம், சாபம் உள்ளவர்கள், தீராத பிரச்சனை உள்ளவர்கள் இவரை வழிபாடு செய்தால் பலன் நிச்சயம் என்பது நம்பிக்கை. இங்கு வந்து வழிபட்டால் எல்லாச் செல்வங்களும் சேரும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள் :
பங்குனி உத்திரத்தில் தேர், தீர்த்தவாரி, வைகுண்ட ஏகாதசி, நவராத்திரி, கிருஷ்ணனுக்கு உறியடி உற்சவம் ஆகியவை சிறப்பாக நடைபெறும்.