ர்நாடகாவில்  ஆனந்தபவன் ஓட்டல் தாக்கப்பட்டிருக்கிறது. தமிழக பதிவெண் கொண்ட லாரிகளுக்கு தீ வைக்கப்பட்டிருக்கிறது.  தமிழ் இளைஞர் ஒருவரை கன்னட வெறியர்கள் சிலர் அடித்து உதைத்திருக்கிறார்கள். இந்த வீடியோவை பார்த்து, தமிழகத்தில் ஒரு சிலர், பதிலுக்கு கன்னடர்களை தாக்க முனைந்திருக்கிறார்கள்.
கர்நாடகா பதிவெண் கொண்ட வாகனத்தை தடுத்து, அதன் ஓட்டுனரை தாக்கியிருக்கிறார்கள்.  கன்னடர் நடத்தும் ஓட்டல் ஒன்றின் மீது பெட்ரோல் பாட்டில் வீசப்பட்டிருக்கிறது.
இந்த செயலுக்கு தமிழர் பலரும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். குறிப்பாக முகநூலில், தமிழர் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள்.
0
அவற்றில் சில.. 
Shahjahan R  அவர்களின் முகநூல் பதிவு:
கர்நாடக மாநிலத்தின் வேன் ஒன்றையும் அதில் இருந்த கன்னடர் ஒருவரையும் தமிழ் தேசியவாதிக் குழுவினர் தாக்கும் வீடியோ ஒன்றைப் பார்க்க நேர்ந்ததது. அந்த நபரை உருட்டுக் கட்டைகளால் தாக்கி விடாமல் அந்தக் குழுவில் இருந்த ஒருவரே தடுத்தார் என்றாலும், இதுபோன்ற பழிவாங்கல் தாக்குதல்களை அனைவரும் கண்டிக்க வேண்டும்.
வன்முறை எந்த ரூபத்திலிருந்தாலும் அதை ஏற்க முடியாது என்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம், அரைவேக்காடுகளின் இதுபோன்ற நடவடிக்கைகள் கர்நாடகத் தமிழர்களுக்குத்தான் ஆபத்தாக முடியும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
அந்த வீடியோவைப் பார்ப்பவர்கள் தயவுசெய்து பகிராதீர்கள். அது எந்த வகையிலும் யாருக்கும் நன்மை தராது.
பந்த் நடந்த மாலை நான் பெங்களூரை அடைந்தேன். மறுநாள் அங்குதான் இருந்தேன். சிலர் மிகைப்படுத்தி எழுதுவதுபோல அங்கிருக்கும் தமிழர்கள் மீது வன்முறைப் பிரயோகம் ஏதும் நடைபெறவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக சமூக விரோத சக்திகள் சிலரை அல்லது சில வாகனங்களை தாக்கியிருக்கலாம். அதைவைத்துக்கொண்டு, ஒட்டுமொத்த பெங்களூரிலும் மோசமான நிலை என்று யாரும் கருத வேண்டாம். தமிழர்கள் தமிழ் பேசிக்கொண்டு இயல்பாகத் தெருக்களில் உலவிக்கொண்டுதான் இருக்கிறார்கள். சனிக்கிழமை சிவாஜி மார்க்கெட்டில் நான் போக வேண்டிய பஸ் குறித்துக் கேட்டபோது, எனக்கு கன்னடம் தெரியாது என்று புரிந்து கொண்டு தமிழிலேயே பதில் சொன்னார்கள்.
 
Raju Mariappan அவர்களின் முகநூல் பதிவு:
இதே வேகத்தை மணலை சுரண்டி காவிரியை மலடாக்குறவன் மேல காட்டினா நீ வீரன்டா.
அத விட்டுட்டு.
பழ. ரகுபதி அவர்களின் முகநூல் பதிவு:
வன்மம் வேண்டாம்!
********* **************
தமிழ் இளைஞரை கன்னடர்கள் தாக்கியுள்ளதும், வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருப்பதும் கண்டனத்திற்குரியது.
மனிதாபிமானமோ, அடிப்படை நீதியோ அற்ற இந்தக் காட்டுமிராண்டித் தனத்திற்குப் பதிலடியாக இந்த சம்பவத்தில் தொடர்பற்ற, கன்னடர்கள் என்பதைத் தவிர, அம்மண்ணில் எந்த வாழ்வுரிமையோ, சொத்துரிமையோ இல்லாத தமிழகத்தில் வாழும் அப்பாவிகளைத் தாக்குவது என்பது நாகரீக தமிழர்கள் செய்யும் செயலாக இருக்க முடியாது.
அப்படி தாக்குவதால் அத்தகைய வெறியர்களின் தமிழர்கள் மீதான தாக்குதல், அதிகரிக்குமே தவிர குறையாது. எல்லா கன்னட இனத்தவரையும் பகைவர்களாக, வெறியர்களாகப் பார்க்க வேண்டியதும் இல்லை!
குற்றவாளிகளை வேண்டுமானால் தண்டிக்கலாமே தவிர அப்பாவிகள் மீது வன்மம் காட்ட வேண்டியதில்லை.
நா சாத்தப்பன் அவர்களின் முகநூல் பதிவு:
எல்லா ஊர்களிலும் பொறுக்கிகள், ரவுடிகள், அரசியல்வாதிகள் உண்டு. அவர்களை வைத்து ஒட்டுமொத்தமாக அந்த ஊரையே தவறாகப் பார்ப்பது மோசமான பின் விளைவு. அவர்களை விட பல மடங்கு அதிக எண்ணிக்கையில் எந்த அரசியலிலும் ஈடுபட விரும்பாத எளிய மக்கள் இருப்பார்கள். அவர்கள்தான் உண்மையில் அம்மண்ணின் அடையாளம்.
எழும்பூர், சென்ட்ரலில் நிறைய சிங்களர்களைப் பார்த்திருக்கிறேன். அவர்கள் ஆன்மீக பயணம் மேற்கொண்ட முதியவர்கள். அவர்களை அடிக்க நினைப்பது எவ்வளவு தவறான விஷயமோ அதே போலத்தான் இங்கு வரும் அப்பாவிகளை அடிப்பதும்.
உங்களுக்கு அடிக்கவேண்டும் என்று தோன்றினால் காவிரி பிரச்னையை கிளப்பும்கன்னட இன வெறியாளர்களையும் ரவுடிகளையும் அடியுங்கள். அதை செய்ய முடியாட்டி இதையும் செய்யாதீங்க.”