சென்னை:

மிழகம் முழுவதும் 2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல்  வெளியிடப்பட்டது. இதில், ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகம் உள்ளனர்.

இந்த ஆண்டின் (2018)  புதிய வாக்காளர் பட்டியல் சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் வெளியிடப்பட்டது. அதைத்தொடர்ந்து சென்னை மாநகராட்சி ஆணையரும், சென்னை மாவட்ட தேர்தல் அலுவலருமான  கார்த்திகேயன் கூறியதாவது,

தமிழ்நாட்டின் 32 மாவட்டங்களில், அதிக எண்ணிக்கையிலான வாக்காளர்கள் உள்ள பகுதி சென்னை இருப்பதாக வும், இங்கு  38.01 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும் கூறினார்.

கடந்த அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்ட வாக்காளர் பெயர்கள் சேர்ப்புக்கு பிறகு 40,606 பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன.  இது கடந்த பட்டியலுடன் ஒப்பிடும்போது,   2.71 லட்சம் குறைவு என்றும், அதாவது 6.67% குறைந்துள்ளதாகவும் கூறி உள்ளார்.

இதுகுறித்து தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

 

தமிழகம் முழுவதும் 1.1.2018 தேதியை தகுதி நாளாக கொண்டு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், திருத்தம், முகவரி மாற்றம் ஆகியவற்றுக்கு மனுக்கள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பெறப்பட்டது.

அதே நேரம் ஒரு வாக்காளரின் பெயர் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் இருந்தால் கண்டுபிடித்து நீக்குவது, இறந்தவர்களின் பெயர்களை நீக்கும் பணிகளிலும் தேர்தல் ஆணைய அலுவலர்கள் வீடு வீடாக சென்று வாக்காளர் பட்டியலை சரி பார்த்தனர்.

வாக்காளர் பட்டியலை முறைப்படி வெளியிட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படை யில், வீடு வீடாக சென்று கள ஆய்வு மேற்கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் 2018ம் ஆண்டுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.

இறுதி வாக்காளர் பட்டியலை, அந்தந்த மாவட்ட கலெக்டர்கள் வெளியிட, தொகுதி தேர்தல் அலுவலர்கள் மற்றும் தாசில்தார்கள் பெற்று கொண்டனர்.

அதன்படி, தமிழகம் முழுவதும் தற்போது மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 5 கோடியே 86 லட்சத்து 84 ஆயிரத்து 541 பேர் உள்ளனர். இது தமிழக மக்களின் மொத்த மக்கள் தொகையில் 74 சதவிகிதம் என்று கூறப்பட்டுள்ளது.

இதில் ஆண்கள் 2,90,48,400, பெண்கள் 2,96,30,944, இதர பிரிவினர் 5,197 என மொத்தம் 5,86,84,541 பேர் ஆகும்.

இறுதியாக கடந்த 2017ம் ஆண்டு ஜனவரி மாதம் 5ம் தேதி வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் 5,92,71,593 வாக்காளர்கள் இருந்தனர்.

அதேபோன்று, வீடு வீடாக போலி வாக்காளர்கள் நீக்கும் பணியின்போது 14 லட்சத்து 91 ஆயிரத்து 857 பேர் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

வாக்காளர்கள்  அதிகம் உள்ள மாவட்டமாக சென்னை மாவட்டம் உள்ளது. இங்கு ஆண்கள் 18,76,652, பெண்கள் 19,24,366, இதர பிரிவினர் 901 என மொத்தம் 38,01,919 வாக்காளர்கள் உள்ளனர். அதற்கு அடுத்தபடியாக காஞ்சிபுரம் மாவட்டம் உள்ளது.

இங்கு, ஆண்கள் 18,42,815, பெண்கள் 18,82,309, இதர பிரிவினர் 347 என மொத்தம் 37,25,471 பேர். குறைந்தபட்ச வாக்காளர்களை அரியலூர் மாவட்டம் கொண்டுள்ளது.

இங்கு, ஆண்கள் 2,50,042, பெபண்கள் 2,51,031, இதர பிரிவினர் 9 என மொத்தம் 5,01,082 பேர். மாநிலத்தில் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர்.

வாக்காளர் பட்டியல்கள், நகராட்சி அலுவலகம், ஆர்டிஓ அலுவலகம், தாலுகா அலுவலகங்கள் மற்றும் அந்தந்த ஓட்டுச்சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.

புதிதாக பெயர் சேர்த்த வாக்காளர்களுக்கு போட்டோவுடன் கூடிய அடையாள அட்டை விரைவில் வழங்கப்படும். பொதுமக்கள் பட்டியலை பார்வையிட்டு தங்கள் பெயர் உள்ளதா என்பதை சரி பார்த்து கொள்ளலாம்.

மேலும் https://elections.tn.gov.in என்ற இணையதளத்திலும் பார்க்கலாம்.  தகுதியுள்ளவர்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளலாம்.

சென்னையில் 16 தொகுதிகளில், ஆர்.கே. நகர் தொகுதியில் மட்டுமே அதிகபட்சமான போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 49,067 பேர்களின் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

தமிழக்ததில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்க நல்லூர் இருப்பதாகவும், இங்கு 6.24 லட்சம் வாக்காளர்கள் இருப்பதாகவும், மிகக்குறைந்த வாக்காளர்கள் உள்ள தொகுதியாக துறைமுகம் இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இங்கு1.65 லட்சம் வாக்களர்கள் மட்டுமே உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.