சென்னை:

நேற்று நள்ளிரவு விண்ணில் பாய்ந்த பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட் மூலம் தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் உருவாக்கிய ‘கலாம் சாட்’ எனப்படும் மிகச்சிறிய செயற்கை கோளும் விண்ணில் ஏவப்பட்டது. தற்போது அந்த செயற்கை கோள் வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்டு உள்ளதாக இஸ்ரோ அறிவித்து உள்ளது.

விண்ணில் வெற்றிகரமாக பாய்ந்த பிஎஸ்எல்சி சி44

தமிழக மாணவர்கள் உருவாக்கிய.இதுவரை எந்த நாடுகளும் தயாரிக்காத அளவுக்கு  மிகவும் எடை குறைந்த சாட்டிலைட் ‘கலாம் சாட்’ . இந்த செயற்கை கோள் விண்ணில் ஏவப்பபட்டது விண்வெளி ஆராய்ச்சியில் வியத்தகு சாதனையை உருவாக்கியுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, நேற்று நள்ளிரவு 11.30 மணிக்கு மைக்ரோ சாட்-ஆர், கலாம் சாட் ஆகிய 2 செயற்கைகோளுடன் பி.எஸ்.எல்.வி.-சி.44 ராக்கெட்டை விண்ணில் ஏவியது. அதைத்தொடர்ந்து செயற்கை கோள்கள் விண்ணில் வெற்றிகரமாக நிலை நிறுத்தப் பட்டு, தனது பணியை தொடங்கி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், கலாம் சாட் எனப்படும் மிகச்சிறிய செயற்கை கோள் தமிழக மாணவர்களால் உருவாக்கப்பட்டது என்பது பெருமைக்குரியது.

தமிழகத்தை சேர்ந்த  மாணவர் ரிபாத் ஷாருக்தான் தலைமையில் 7 கல்லூரி மாணவர்கள் இணைந்து, ஸ்பேஸ் கிட்ஸ் என்ற நிறுவனத்தின் ஆலோசனையுடன் இந்த செயற்கை கோளை வெற்றிகரமாக உருவாக்கி சாதனை படைத்துள்ளனர்.

கலாம்சாட் உருவாக்கிய தமிழக மாணவர்கள் குழு

வெறும் 64 கிராம் எடை மட்டுமே உள்ள இந்த கலாம்சாட் செயற்கை கோள், 3.8 கனமீட்டர் மட்டுமே வடிவம் கொண்டதுடன், இது 3 டி பிரிண்ட்டர் மூலம் கார்பன் பைபர் பாலிமர் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது.

இதில் சில பொருட்கள் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டு உருவாக்கப்பட்டு இணைக்கப்பட்டு இருப்பதாகவும்,  இந்த சாட்டிலைட் உருவாக்க சுமார் 12 லட்சம் ரூபாய் வரை செலவிடப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சாட்டிலைட் நானோ சாட்டிலைட்டுக்களுக்கு இடையே நடத்தப்படும் பரிவர்த்தனைகளை சோதனை செய்வதற்காக உருவாக்கப்பட்ட சோதனை சாட்டிலைட் என்பது குறிப்பிடத்தக்கது.

.இந்த சாட்டிலைட்தான் உலகிலேயே மிகவும் எடை குறைந்த சாட்டிலைட் ஆகும். இது தற்போது ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸில் இடம்பிடித்து இருக்கிறது. சரியாக விண்ணில் ஏவப்பட்ட இது தன்னுடைய பணியை தொடங்கி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவாக தனியார் சாட்டிலைட்களை விண்ணில் ஏவ பணம்  பெறும் இஸ்ரோ, தமிழக மாணவர்கள் உருவாக்கிய சாட்டிலைட்டை விண்ணில் ஏவ பணம் பெறாததுடன் மாணவர்களை அவ்வப்போது ஊக்குவித்தும் வந்தது.

கலாம்சாட் உருவாக்கிய மாணவர்களுக்கு இஸ்ரோ தலைவர் சிவன் பாராட்டு

இந்த நிலையில், கலாம் சாட்  நேற்று விண்ணில் ஏவப்பட்டதும், அதை உருவாக்கி சாதனை படைத்த மாணவர்களை அழைத்து. செய்தியாளர்கள் முன்னிலையில்  அறிமுகப்படுத்தி,   பெருமைப்படுத்தியும், வாழ்த்தியும் பேசினார் இஸ்ரோ தலைவர் சிவன்.

தமிழகத்தை சேர்ந்த மாணவர்கள் தயாரித்த மிகச்சிறிய செயற்கை கோளான  ‘கலாம்சாட்’ இன்று உலக அளவில் பேசப்படுகிறது. விண்வெளி வரலாற்றில்  சாதனை படைத்துள்ளத. உலக நாடுகள் தமிழக மாணவர்களின் வியத்தகு சாதனையை எண்ணி மூக்கில் விரலை வைத்து உள்ளன.