காங்கிரஸ்  பொதுச்செயலாளராக பிரியங்கா காந்தி நியமிக்கப்பட்ட நிமிடத்தில் இருந்து பா.ஜ.க.பாசறை பதற்ற பிரதேசமாக மாறிப்போயிருப்பது நிஜம். ஆனாலும் பகிரங்கமாக வெளிக்காட்டிக்கொள்ளாமல் , தங்களை தாங்களே சமாதானம் செய்து கொள்கிறார்கள்.

’’மக்களவை தேர்தலில் பிரியங்காவின் வருகை எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’’ என்று மத்திய அமைச்சர் மனோஜ் சின்ஹா  டெல்லியில் சன்னமான குரலில் முனக,அதே வார்த்தையை சென்னையில் சத்தமாக தமிழில் மொழி பெயர்க்கிறார் தமிழிசை.

ஆனால் பா.ஜ.க.வின் பால்ய தோழரான சிவசேனாவின் தளபதி சஞ்சய் ராவுத், ’’பிரியங்கா வரவால் காங்கிரஸ் பயன் அடையும்..இது ராகுல் எடுத்த நல்ல முடிவு’’ என்று கை தட்டி பாராட்டி இருக்கிறார்.

இந்த விமர்சனங்களை எல்லாம் காதில் போட்டுக்கொள்ளாமல் அடுத்தடுத்த தளங்களில் பயணிக்க தொடங்கி விட்டது காங்கிரஸ். நாடாளுமன்றத்துக்கு 80 எம்.பி.க்களை அனுப்பும் மொத்த விற்பனையகமான உ.பி,சந்தையை வளைக்கும் முயற்சியில் முனைப்பாக இருக்கிறார் ராகுல்

“மிஷன் சூப்பர் 30’’ என்று தனது பார்முலாவுக்கு அடைமொழி  சூட்டி களமாடப்போகிறார் ராகுல்.
அது என்ன’ மிஷன் சூப்பர் 30-?

கடந்த தேர்தலில் உ.பி.யில்  காங்கிரஸ் கட்சி இரண்டு தொகுதிகளில் மட்டுமே ஜெயித்தது. அதிக பட்சமாக கடந்த 2009 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் 22 தொகுதிகளில் காங்கிரஸ் வாகை சூடியது. அந்த தொகுதிகளை மீட்டெடுப்பதோடு எதிரிகளிடம் இருந்து கூடுதலாக 8 தொகுதிகளை பறிப்பதே. ‘’மிஷன் சூப்பர் 30-‘’ .

கடந்த இரு தினங்களாக அமேதி மற்றும் ரேபரேலியில் சுற்றுப்பயணம் செய்த ராகுல்- மிஷன் சூப்பர் திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பை நிர்வாகிகள் கையில் ஒப்படைத்து விட்டு டெல்லி திரும்பி விட்டார்.

அவரது அடுத்த கட்ட நிகழ்வு இந்தியாவையே திரும்பி பார்க்க வைக்கப்போகிறது.
வரும் 4 ஆம் தேதி லக்னோவில் தங்கை பிரியங்காவுடன் செய்தியாளர்களை சந்திக்கப் போகிறார். கட்சியில் உயர் பதவிகளுக்கு வந்த பின் இருவரும் நடத்தும் முதல் செய்தியாளர் சந்திப்பு இது என்பதால் நாடு கடந்தும் ஊடக நண்பர்கள் லக்னோவில் குவியப்போகிறார்கள்.
அந்த நிகழ்வு ஊடக கும்பமேளாவாக இருக்கும் என்கிறார்கள் டெல்லி பத்திரிகையாளர்கள்.

இந்த செய்தியாளர்  சந்திப்பில் ,பிரியங்காவை  ரேபரேலி தொகுதி வேட்பாளராக ராகுல் அறிவிக்கும் சாத்திய கூறுகள்  உள்ளன.

ஒரு கொசுறு தகவல்.

’’மத்தவங்க கொடுத்தத நான் திருப்பி கொடுக்காம விட்டதில்ல’’என்று ஒரு படத்தில் ரஜினி வசனம் பேசி இருப்பார்.  படத்தில் ரஜினி சொன்னதை லக்னோவில் ராகுலும் சொல்லப் போகிறார்.

கொஞ்ச நாட்களுக்கு முன்பு ,காங்கிரசுடன் உறவை முறித்துக்கொண்ட  அகிலேஷ், ‘’கூட்டணி இல்லாவிட்டாலும் சோனியா மற்றும் ராகுலுக்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்’’ என்று தாராளம் காட்டி இருந்தார்.

அதே பாணியில் ராகுலும் “கூட்டணி இல்லாவிட்டாலும் அகிலேஷ்ஜி ,மாயாவதிஜி க்கு எதிராக வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம்’’என்று கூறி இரு தொகுதிகளை அவர்களுக்கு தாரை வார்க்கப்போகிறாராம்.

-பாப்பாங்குளம் பாரதி.