சென்னை: மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்து ஏற்கனவே அறிவிப்பு வெளியான நிலையில், தற்போது காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பை மாற்றி வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை.

காலாண்டு தேர்வு, பொதுத்தேர்வாக நடைபெறாது என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்த நிலையில், பள்ளி தலைமை ஆசிரியர்கள், காலாண்டு தேர்வை செப்டம்பர் 30ந்தேதிக்குள் விருப்பப்பட்ட நாட்களில் நடத்தி முடிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. வினாத்தாள் லீக் ஆன நிலையில், புதிய நடைமுறையை அறிவித்திருந்தது. மேலும், காலாண்டு விடுமுறை தொடர்பான அறிவிப்புகளும் ஏற்கனவே வெளியிடப்பட்டது.

இந்த நிலையில், மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு உள்ளது.

 அதன்படி, தமிழகத்தில் 1முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ந்தேதி முதல் அக்டோபர் 9ந்தேதி விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. மீண்டும் அக்டோபர் 10ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எண்ணும் எழுத்தும் திட்ட வளறி மதிப்பீட்டுத் தேர்வுக்காக 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு அக்டோபர் 1ந்தேதி முதல் அக்டோபர் 5ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டு, அக்-6 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஆகஸ்டு மாதம் 22ந்தேதி பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில், காலாண்டு தேர்வுக்கான அட்டவணை மற்றும் விடுமுறை குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி 1 முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செப்., 26 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை காலாண்டு தேர்வு நடைபெறும். பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு செப்., 23 முதல் 30 ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. அதுபோல, காலாண்டு விடுமுறை, .அக்டோபர் 1 முதல் அக்டோபர் 5 ஆம் தேதி வரை காந்தி ஜெயந்தி, சரஸ்வதி பூஜை உள்ளிட்டவற்றுக்காக விடுமுறை அளிக்கப்படுகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.