சென்னை: நீட் தேர்வு விவகாரத்தில் திமுக அரசு பல்டி அடித்துள்ளது. நீட் தேர்வுக்கு தயாராகும்படி மாணாக்கர்களுக்கு அமைச்சர் பொன்முடி அழைப்பு விடுத்து உள்ளார். தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும் நீட் கோச்சிங்கை முதலமைச்சர் ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு விலக்கு அளிக்கப்படும் என்றும், ஆட்சிக்கு வந்ததும் முதல் கையெழுத்தே நீட் விலக்குதான் என வாக்குறுதி வழங்கியது. ஆனால், ஆட்சிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகள் கடந்தும், தனது வாக்குறுதியை நிறைவேற்ற முடியாமல் திணறி வருகிறது. இதற்கிடையில் நீட் பயிற்சி வகுப்புகளையும் மூடியதால்,  கடந்த இரு ஆண்டுகளாக நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் பெரும் தோல்வியை சந்தித்து வருகின்றனர். இது  பெற்றோர்கள் இடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடும் விமர்சனங்களையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து, மீண்டும் நீட் கோச்சிங்கை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த உயர்கல்வித்துறை பொன்முடி,  நீட் இருக்கும் வரை மாணவர்களை தயார் செய்துதான் ஆக வேண்டும் எனவும் அதற்கான ஏற்பாடுகள் அரசு கல்வி நிறுவனங்களில் செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

வழக்கமாக டிசம்பரில் தொடங்கும் நீட் பயிற்சி இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கப்படும் என்றவர், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு நீட் பயிற்சி வகுப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடுத்த மாதம் தொடங்கி வைக்கிறார். நீட் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை உயர்த்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழ் ஆங்கிலம் இருமொழி முக்கியம் என்றவர், தேர்வு எழுதும் மொழியாக தமிழ் மற்றும் ஆங்கிலம் இருக்க வேண்டும் என்றும், மூன்றாம் மொழி பாடத்திட்டத்தில் கட்டாயம் ஆக்கக் கூடாது என்றவர்,  மாணவர்களை புத்தக பூச்சிகளாக மாற்றிவிட வேண்டாம். தொழில் பயிற்சியில் ஆர்வம் உடையவர்களாக மாற்ற வேண்டும் என்றும் கூறினார்.

80% தோல்வி எதிரொலி: அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி வகுப்புகளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்…