சென்னை: தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு பள்ளிக்கல்வித்துறை சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது  அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதகளை நாளை வழங்கப்படுகிறது. 2022-23-ம் ஆண்டுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதான நல்லாசிரியர் விருது பெறுபவர்களின் பட்டியலை பள்ளி கல்வித்துறை வெளியிட்டு இருக்கிறது

இந்தியாவின் முன்னாள் ஜனாதிபதியான ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் 5ம் தேதி ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் இந்தியா முழுவதும் சிறப்பாக பணியாற்றி ஆசிரியர்களின் சேவையை பாராட்டி மத்திய, மாநில அரசுகள் சார்பில் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு அரசு நடப்பு ஆண்டுக்கான நல்லாசிரியர் விருது அறிவித்துள்ளது.   அரதன்படி, மாநில அரசு சார்பில் அரசு பள்ளி ஆசிரியர்கள் 342 பேர், மெட்ரிக் பள்ளி ஆசிரியர்கள் 38 பேர், ஆங்கிலோ இந்தியன், மாற்றுத்திறனாளிகள், சமூக படையில் (என்.சி.சி., என்.எஸ்.எஸ்.) தலா 2 பேர் என மொத்தம் 386 சிறந்த ஆசிரியர்கள் அதற்காக நியமிக்கப்பட்ட குழுவால் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள், நாளை (செப்டம்பர் 5ந்தேதி) சென்னை  சேப்பாக்கத்தில் உள்ள கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்றும்,  விருதை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வழங்குவார்எ ன தெரிவிக்கப்பட்டு உள்ளது.

 இதைத்தொடர்ந்து, விருதுக்கு  தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சில அறிவுறுத்தல்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதில், ஆசிரியர்கள் தங்களுடன் இரண்டு பேரை மட்டுமே  நிகழ்ச்சியில் பங்கேற்க அழைத்து வரலாம். நிகழ்ச்சி நடைபெறும் தினத்தன்று காலை 10 மணிக்கு நிகழ்ச்சி நடைபெறும் கலைவாணர் அரங்கத்தில் பதிவு செய்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

இதே போல் தகுதியானவர்களாக தேர்வு செய்யப்பட்டு இருக்கும் ஆசிரியர்கள் மீது குற்றவியல் மற்றும் ஒழுங்கு நடவடிக்கை ஏதும் இல்லை என்பதை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மீண்டும் உறுதி செய்து கொள்ள வேண்டும். அவ்வாறு எதுவும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டதும் அதற்கான அத்தாட்சியுடன் பள்ளியில் இருந்து விடுவித்து இந்த விழாவில் பங்கேற்க அனுமதி கடிதம் வழங்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.