டெல்லி:

மிழக உள்ளாட்சித் தேர்தலுக்கு தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கில் இன்று விசாரணை முடிவடைந்த நிலையில், தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில், நாளை காலை தீர்ப்பு வழங்கப்படும் என்று உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.

உள்ளாட்சித் தேர்தலுக்குத் தடை கோரி திமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான அமர்வின் இன்று காரசாரமாக விசாரணை நடைபெற்றது.

திமுக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, கபில் சிபல், வில்சன் ஆகியோர் ஆஜரானார்கள். அரசுத் தரப்பில் முகுல் ரோத்தகி ஆஜரானார்.

தமிழகத்தில் 5 புதிய மாவட்டங்கள் ஏற்படுத்தப்பட்ட நிலையில், வார்டுகள் மறுவரை செய்யாமல் தேர்தலை நடத்தக்கூடாது என்று திமுக வழக்கு தொடர்ந்தது.  இது தொடர்பான விவாதத்தின்போது, பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு தொகுதி மறுவரையறை செய்யாததால் , உள்ளாட்சித் தேர்தல் நடைபெற்றால் குழப்பம் ஏற்படும்  திமுக தரப்பில் கூறப்பட்டது.

ஆனால்,  தமிழகத் தேர்தல் ஆணையம் தரப்பில் தொகுதி மறுவரையறை, தனித்தொகுதி ஒதுக்கீடு, பெண்கள் ஒதுக்கீடு என்ற அனைத்துப் பணிகளும் 2011-ம் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி முடிந்து விட்டது. புதிதாகப் பிரித்த மாவட்டத்துக்கு தொகுதி மறுவரையறை தேவையில்லை, அது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பிறகே பிரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

காரசாரமாக விவாதங்களைத் தொடர்ந்து, ? தேவைப்பட்டால் தேர்தலை எங்களால் தள்ளிப்போட முடியும்” எனத் தெரிவித்த நீதிபதிகள், தமிழக அரசு விரிவாக விளக்கம் அளிக்கும்படி கூறி வழக்கை மதியம் 2 மணிக்கு தள்ளி வைத்தது.

அதைத்தொடர்ந்து, தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்த விளக்க அறிக்கையில், ” 9 புதிய மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலைத் தள்ளி வைக்கலாம்” என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால்,  திமுக தரப்பில், ”தடை விதித்தால் மொத்தமாகத் தேர்தலுக்குத் தடை விதியுங்கள். இல்லை என்றால் குழப்பம் ஏற்படும்” என்று வாதம் வைக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், ”மறுவரையறை செய்யாத 9 மாவட்டங்களை விடுத்து பிற மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தத் தயார் என தமிழகத் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. எனவே, பிரிக்கப்பட்டு மொத்தமாக உள்ள 9 மாவட்டங்களுக்கு தேர்தல் நடத்தலாம்” எனக் கருத்து தெரிவித்தனர்.

இது தொடர்பாக  தீர்ப்பை ஒத்தி வைப்பதாக அறிவித்தனர்.  உள்ளாட்சித் தேர்தலுக்கு நாளை முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்ற நிலையில், இன்று தீர்ப்பு வழங்காத உச்சநீதி மன்றம்,  நாளை (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்குத் தீர்ப்பு வெளியாகும் என அறிவித்து உள்ளது.