சென்னை: தேசிய மக்கள் தொகை பதிவேட்டுக்கான புதிய நடைமுறைகளை தமிழக அரசு ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

நாடு முழுவதும், 2021ம் ஆண்டுக்கான மக்கள் தொகை கணக்கெடுப்புடன் தேசிய மக்கள் தொகை பதிவேடு புதுப்பிக்கும் பணி வரும் ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி செப்டம்பர் 30ம் தேதி வரை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தேசிய குடிமக்கள் பதிவேடான என்ஆர்சியை பின்வாசல் வழியாக கொண்டு வரும் முயற்சி தான் தேசிய மக்கள் தொகை பதிவேடு என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் என்பிஆரை அந்தந்த அரசுகள் ஏற்றுக் கொள்வதாக அறிவித்துள்ளன.

பாஜக ஆட்சியில் இல்லாத மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன. இதுதொடர்பான உயர்நிலைக்குழு ஆலோசனை கூட்டம் உள்துறை அமைச்சகத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தமிழக அரசின் சார்பில் தலைமை செயலாளர் சண்முகம் பங்கேற்கவில்லை. வருவாய்த்துறை உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் என்பிஆர் மற்றும் என்ஆர்சி பற்றிய சந்தேகங்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டன. இதையடுத்து, தமிழக அரசு என்பிஆரை ஏற்றுக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த தகவலை மத்திய உள்துறை அமைச்சக தகவல்கள் வெளியிட்டுள்ளன. என்பிஆர் தொடர்பான கூடுதல் விவரங்கள் தமிழகத்துக்கு பொருந்தாது என்பதால் ஏற்றுக் கொண்டிருப்பதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

என்பிஆரை ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ள தமிழக அரசு, அதே நேரத்தில் என்ஆர்சியை ஏற்க மறுத்துள்ளனர். ஆலோசனை கூட்டத்தில் வேறு எதுவும் விவாதிக்கப்படவில்லை. 3,4 கேள்விகிள் மட்டுமே கேட்கப்பட்டன