சென்னை: காணும் பொங்கலையொட்டி மக்கள் அதிகம் கூடிய மெரினா, எலியட்ஸ் கடற்கரையில் 26 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

தமிழகம் முழுவதும் காணும் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு சென்னையில் உள்ள பொழுது போக்கு மையங்கள், வழிபாட்டு தலங்கள், கடற்கரை, பூங்கா பகுதிகளில் மக்கள் ஒன்றாக கூடி கொண்டாடினர்.

மெரினா கடற்கரை, எலியட்ஸ் கடற்கரை, கிண்டி சிறுவர் பூங்கா என எங்கு பார்த்தாலும் பொதுமக்கள் திரண்டு வந்து காணும் பொங்கலை கொண்டாடினர்.

இவ்வாறு கூடிய மக்கள் விட்டுச் சென்ற குப்பைகள் மாநகராட்சி தரப்பில் அகற்றப்பட்டது. மொத்தம் 26 டன் குப்பைக் அகற்றப்பட்டுள்ளன. இதுதொடர்பாக சென்னை மாநகராட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளது.

அதில் கூறப்பட்டு இருப்பதாவது: மெரினா கடற்கரையில் மட்டும் 15.8 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. எலியட்ஸ் கடற்கரையில் 10 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.

பொங்கல் விடுமுறை நாட்களில் மட்டும் ஒட்டு மொத்தமாக 42 டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. 120 பணியாளர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். மொத்தம் 6 வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.

காணும் பொங்கலுக்காக கடற்கரையில் 1 லட்சம் மக்கள் திரண்டனர், அவர்களில் 5,000 பேர் எலியட்ஸ் கடற்கரைக்கு வந்து சென்றனர் என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.