சென்னை

மிழகத்தில் சென்னையில் இருந்து டில்லி, மும்பை, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை உள்ளிட்ட11 வழித்தடங்களில் விரைவில் தனியார் ரெயில் இயக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 2015-ம் ஆண்டு ரெயில்வே துறையின் நிதி ஆதாரத்தை மேம்படுத்துவது, சீரமைப்பது தொடர்பாக பல்வேறு முக்கிய பரிந்துரைகளை விவேக் தேவ்ராய் குழு தெரிவித்தது. இதையொட்டி தனியார் மூலம் பயணிகள் ரயிலை இயக்குவது, வருவாயைப் பெருக்க மண்டல அதிகாரிகளுக்கு அதிகாரம் அளிப்பது போன்ற பல்வேறு திட்டங்களை ரெயில்வே துறை அறிமுகம் செய்து வருகின்றது.

மத்திய ரெயில்வே அமைச்சகம் அடுத்த 5 ஆண்டுக்குள் 150 தனியார் ரயில்கள் இயக்க முடிவு செய்து,  இதுதொடர்பான வரைவு அறிக்கையை நிதி ஆயோக் வெளியிட்டுள்ளது.  அதன்படி ரூ.22 ஆயிரம் கோடி முதலீட்டில் 100 நகரங்கள் இடையே 150 தனியார் ரயில்கள் இயக்குவதற்கான திட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் இதற்கான திட்ட விவரங்கள், கட்டண நிர்ணயம் போன்றவை அறிவிக்கப்பட் டுள்ளன.

பெரும்பாலான ரயில்கள் பெரிய நகரங்களை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளன.  மேலும் இவற்றில் குறைந்தபட்சம் 16 பெட்டிகள் இருக்க வேண்டும், தற்போது உள்ள யார்டு, ரயில் பெட்டி சுத்தம் செய்யும் இடங்களில் தனியார் ரயில்களுக்கும் இடம் ஒதுக்கீடு செய்யப்படும், ரயில்களை இயக்கும் நிறுவனம், சந்தை விலைக்கு ஏற்ப தங்கள் விருப்பப்படி கட்டணத்தை நிர்ணயம் செய்து கொள்ளலாம், அடிக்கடி பயணம் செய்பவர்களுக்குச் சலுகை வழங்கலாம் என்பன உள்ளிட்ட விதிமுறைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தெற்கு ரயில்வே அதிகாரிகள் இது குறித்து, “இந்திய ரெயில்வே நாடு முழுவதும் 150 தனியார் ரெயில்களை இயக்க முடிவு செய்து, அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த ரெயில்களை அதிகபட்சம் 160 கி.மீ. வேகம் வரை இயக்கலாம்,   15 நிமிடத்துக்கு மேல் தாமதம் ஆகக் கூடாது என்பது போன்ற விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. அதில், சென்னையில் இருந்து ஜோத்பூர் (வாராந்திர ரயில்), மும்பை பனுவல் (வாரம் இருமுறை), டெல்லி ஓக்லா, ஹவுரா, செகந்திராபாத், கோவை, தாம்பரத்தில் இருந்து திருச்சி, மதுரை, நெல்லை, கன்னியாகுமரி, பெங்களூரு என தமிழகத்தில் மொத்தம் 11 தனியார் ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

இந்த சேவைக்கான ஒப்பந்தப்புள்ளி அறிவிக்கப்பட்டு நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பணிகள் இறுதிக்கட்டத்தை நெருங்கி உள்ளன.  இந்த திட்டம் சொகுசாகவும், விரைவாகவும் பயணம் செய்ய விரும்பும் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கிறோம்.  மேலும்  இதனால்,  மற்ற விரைவு ரயில்கள் சேவையில் எந்த பாதிப்பும் இருக்காது.” எனத் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து டிஆர்இயு தொழிற்சங்கத்தின் உதவித் தலைவர் இளங்கோவன், ‘‘பயணிகளின் பாதுகாப்புக்குத் தனியார் ரெயில்களைஇயக்குவதால்  அச்சுறுத்தல் இருக்கிறது. அது தவிர, தனியார் நிறுவனங்கள் லாப நோக்கத்தோடு செயல்படும் என்பதால், ரயில் கட்டணம் பல மடங்கு உயரும் அபாயமும் உள்ளது.  ரெயில்வேயின் வருமானமும் குறையும்.

இந்த திட்டத்தின் கீழ் வரும் ரெயில் பெட்டிகள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் என்பதால், ரயில்வே தொழிற்சாலைகளில் பெட்டிகள் தயாரிப்பு பணி முடங்கும். பொதுமக்களின் வரிப்பணத்தில் கட்டப்பட்ட தாம்பரம் ரயில் முனையத்தில் இருந்து அதிக அளவில் தனியார் ரெயில்களை இயக்க திட்டமிட்டிருப்பது ஏற்புடையது அல்ல என்பதால் இத்திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும்’’ எனக் கூறி உள்ளார்.