சென்னை:

 மத்தியஅரசின் இடஒதுக்கீடு சலுகைகளை பெறும் வகையில்,  தமிழகத்தில் டிஎன்சி (DNC) என அழைக்கப்பட்ட சீர்மரபினர் சமூகத்தினர் இனிமேல், டின்என்டி (DNT) எனப்படும்  சீர்மரபினர் பழங்குடியினர் என்று அழைக்கப்படுவர் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து, தமிழக அரசின் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், சீர்மரபினர் சமூகத்தினர் என்பது தமிழகத்தை பொருத்தவரை சீர்மரபினர் பழங்குடியினரை மட்டுமே குறிப்பிடுவதாக சமூகநலத்துறை அமைத்த குழு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அந்த  குழுவின் பரிந்துரையை ஏற்று 1979ம் ஆண்டு சீர்மரபினர் பழங்குடியினர் என்ற பெயரை சீர்மரபினர் சமூகத்தினர் என மாற்றி வெளியிடப்பட்ட அரசாணை விலக்கிக்கொள்ளப்படுகிறது.

தமிழக அரசின் இட ஒதுக்கீடு சலுகை மற்றும் நலத்திட்ட சலுகைகளை பெறுவதற்கு இதுவரை சீர்மரபினர் சமூகங்கள் என அழைக்கப்பட்ட 68 சமூகங்கள் சீர்மரபினர் சமூகங்கள் என்றே அழைக்கப்படுவார்கள்.

அதே நேரம் மத்திய அரசின் நலத்திட்ட பலன்களை பெறுவதற்கு இந்த 68 சமூகத்தினரும் சீர்மரபினர் பழங்குடியினர் என அழைக்கப்படுவர்.

இவ்வாறு  அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.