கூட்டணி பற்றியும், எதிர்வரும் தேர்தல் நிலைபாடுகள் பற்றியும் கட்டுப்பாடின்றி பேசினால், கட்சியில் இருந்து நீக்கப்படுவீர்கள் என காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக காங்கிரஸ் மாநில தலைவர் கே.எஸ் அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழகத்தில் அமைக்கப்பட்ட மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி என்பது சில பாராளுமன்ற, சட்டமன்ற தொகுதிகளுக்காக அமைக்கப்பட்டதல்ல. இந்தியாவின் இறையாண்மையை காக்க வேண்டும்; சாதி மத பேதமற்ற சமதர்ம சமுதாயத்தை அமைக்க வேண்டும்; சமூக நீதியைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக அமைக்கப்பட்டதாகும். இந்த கூட்டணியை அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தியும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும் உயர்ந்த நோக்கத்தோடு அமைத்தார்கள்.

இந்த வரலாற்று புகழ்பெற்ற கூட்டணியை சிலர் சிறு ஆசைக்காக சிதைப்பது என்பதை எம்மால் ஏற்றுக்கொள்ள இயலாது. தனிமனித லாப நஷ்டங்களையும், ஆசைகளையும் தவிர்த்து, சீறிய லட்சியத்திற்காக தியாகம் செய்திட வேண்டும் என்பதுதான் தேசிய இயக்கத்தின் உயிர்மூச்சாகும்.

கூட்டணியை பற்றியோ, தேர்தல்களை பற்றியோ, கூட்டணிக் கட்சிகளோடு பேசுகிற அதிகாரம் காங்கிரஸ் தலைமைக்கு மட்டுமே உண்டு, மற்றவர்கள் அதுபற்றி பேசுதல் கூடாது. தங்களுக்கு தோன்றும் எண்ணங்களை நேரிலோ, கடிதம் மூலமோ காங்கிரஸ் தலைமைக்கு தெரிவிக்கலாமே தவிர, ஊடகங்கள் மூலமாக எந்த செய்தியையும் யாரும் தெரிவிக்கக்கூடாது. அப்படி கட்டுப்பாடின்றி செயல்படுபவர்கள் உடனடியாக கட்சியில் இருந்து அகற்றப்படுவார்கள் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

தி.மு.க.வின் முன்னோடி கே.என்.நேரு சில கருத்துகளை சொல்லியிருக்கிறார். அது அவருடைய தனிப்பட்ட உரிமை. தி.மு.க.வின் தலைமையில் தமிழகத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி அமைக்கப்பட்டதென்பது, தலைவர் ராகுல்காந்தி, ஸ்டாலினின் உதிரத்தால் கையெழுத்திட பெற்றதாகும். அதனை அழகிரி நினைத்தாலும் அல்லது கே.என்.நேரு நினைத்தாலும் பிரித்துவிட முடியாத உறுதியான கூட்டணியாகும்.

தமிழகத்தில் கடந்த தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி பெற்ற வெற்றியைப்போல தொடர்ந்து பல வெற்றிகளைப் பெற அனைவரும் இணைந்து செயல்படுவோம்” என்று தெரிவித்துள்ளார்.