சென்னை: கேரளாவில் நிலச்சரிவில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இடுக்கி மாவட்டம், மூணாறின் ராஜமாலா என்ற இடத்தில் உள்ள தேயிலை  எஸ்டேட் பகுதியில், பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மண்ணில் புதைந்தன. அங்கு வசித்த 80 பேர் மாயமாகினர்.

அங்கிருந்து தப்பித்தவர்கள், தெரிவித்த தகவலையடுத்து, 100க்கும் மேற்பட்டோர் மீட்பு பணியில் ஈடுபட்டனர். கனமழை காரணமாக, மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. தற்போது வரை 15 பேர் மீட்கப்பட்டுள்ள நிலையில், 17 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்களில் 9 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

கேரளா மாநிலம், இடுக்கி மாவட்டம், மூணாறு பகுதியில் இன்று (07.08.2020) அதிகாலை தேயிலை தோட்டப் பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும்,  அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை விரைந்து மீட்டெடுத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டுமாய் மாண்புமிகு கேரளா முதலமைச்சர் அவர்களை கேட்டுக் கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.