கோவை: சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது தான் நாகரிக அரசியலா?  என முதல்வர் விஜய்க்கு- பாஜக முன்னாள் எம்எல்ஏ  வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பி உள்ளார்.

300 ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமர் மோடிக்கு ஒரு பாராட்டு கூட தெரிவிக்காமல் இருப்பது தான் முதலமைச்சர் விஜய்யின் நாகரிக அரசியலா என பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், சோழர் பெருமையை மீட்டெடுத்த பிரதமர் மோடியை ஒட்டுமொத்த தமிழகமும் உச்சி நுகர்ந்து கொண்டாடி வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆனைமங்கலம் சோழர் கால செப்பேடுகளை லெய்டன் பல்கலைக்கழகம் திருப்பியளிக்கும் நிகழ்வு குறித்து தமிழக முதலமைச்சர் மௌனம் சாதித்து வருவதாகவும், இது வெறும் மறதியல்ல, திட்டமிட்ட அலட்சியம் என தோன்றுவதாகவும் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு உடனடியாக அறிக்கை வெளியிடும் முதலமைச்சர், தமிழ் பண்பாட்டை உலகுக்கு மீண்டும் அறிவித்த பிரதமருக்கு நன்றி சொல்ல தயக்கம் காட்டுவது ஏன் எனவும் வினவியுள்ளார்.

“மாற்றம்” என்ற பெயரில் ஆட்சிக்கு வந்த முதலமைச்சரின் நடவடிக்கைகள் கடந்த கால திமுக ஆட்சியை விட எந்த விதத்திலும் வித்தியாசமில்லை என விமர்சித்துள்ள வானதி சீனிவாசன்,
தமிழர் வழி மரபில் வந்த முதலமைச்சர், தமிழ் வரலாறு மீட்டெடுக்கப்படும்போது பாராட்டு தெரிவிக்காமல் இருப்பதுதான் நாகரிக அரசியலா என வினவியுள்ளார்.

மேலும், முதலமைச்சர் விஜய்யால் மாற்றம் வரும் என்று நம்பி ஓட்டுப் போட்ட மக்களை இந்த மௌனம் ஏமாற்றுகிறது என குறிப்பிட்டுள்ள வானதி சீனிவாசன், செப்பேடுகள் தமிழகத்திற்கு வரும் நாளை சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

[youtube-feed feed=1]