சென்னை:  நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றும் வகையில், நாளை (8ந்தேதி) சட்டமன்றபேரவை சிறப்பு கூட்டம் நாளை  நடைபெறுகிறது. இந்த கூட்டத்தை தமிழக மக்கள் காணும் வகையில், நேரலை (நேரடி ஒளிபரப்பு) செய்ய தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.

தமிழகஅரசு  சட்டமன்றத்தில் நிறைவேற்றி  ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்ட நீட் விலக்கு மசோதாவை ஆளுநர் 8 மாதங்களுக்கு பிறகு திருப்பி அனுப்பியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு தமிழக அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதையடுத்து, அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் கூட்டப்பட்டது. இதில், மீண்டும் நீட் விலக்கு மசோதாவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்ப வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

இதையடுத்து, செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, பிப்ரவரி 8ந்தேதி (நாளை – செவ்வாய்கிழமை)  காலை 10 மணிக்கு தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டப்பேரவை மண்டபத்தில் சிறப்புக் கூட்டம் நடைபெறும் என தெரிவித்தார். அத்துடன் இந்த கூட்டம், மாணவர்களின் நலனுக்காகவே என்றும், கூட்டத்தில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இதையடுத்து நாளை சட்டப்பேரவை கூட்டம், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டப்பேரவை அரங்கில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தை நேரடி ஒளிபரப்பு செய்ய தமிழகஅரசு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.