சென்னை:  மகாத்மா காந்தியின் பிறந்தநாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழ்நாடு ஆளுநர் ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.  ஆளுநருக்கும் முதல்வருக்கும் இடையே மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், இன்றைய நிகழ்ச்சியில் இருவரும் இணைந்து கலந்துகொண்டது வியப்பதை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து ஆளுநருக்கும், தமிழக அரசுக்கும் மோதல் நடைபெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களில் பலவற்றிற்கு ஆளுநர் இதுவரை ஒப்புதல் கொடுக்கவில்லை. இது தொடர்பாக கருத்து மோதல் நடந்து வருகிறது. சனாதனம் உள்ளிட்ட விவகாரங்களிலும் ஆளுநர் மற்றும் அரசுக்கும் பிரச்சினை இருந்து வருகிறது. மேலும்,  சனாதனம் விவகாரம், துணைவேந்தர் விவகாரம் மற்றும் தமிழகத்தில் பட்டியலின மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்று திமுக அரசை ஆளுநர் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார். இந்த நிலையில், இன்று மகாத்மா காந்தி பிறந்தநாளில் இருவரும் ஒன்றாக கலந்துகொண்டது  வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்று மகாத்மா காந்தியின்  பிறந்தநாளையொட்டி சென்னை எழும்பூரில் உள்ள அருங்காட்சியத்தில்  அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்துக்கு ஆளுநர் ரவி, முதலமைச்சர் ஸ்டாலின் மலர் தூவி மரியாதை செய்தனர். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, சாமிநாதன், சென்னை மேயர் ப்ரியா ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதன் பின்னர் காந்தியின் நினைவைப் போற்றக்கூடிய பஜனைப் பாடல்களை மாணவிகள் பாடினர். அதனை ஆளுநரும், முதல்வரும் அருகருகே அமர்ந்து,  ரசித்தனர். இந்த  நிகழ்ச்சியில் அமைச்சர்கள் துரைமுருகன், பி.கே.சேகர் பாபு, மா.சுப்பிரமணியன், எ.வ.வேலு, ராஜகண்ணப்பன் உள்படப லர் கலந்துகொண்டனர்.