சென்னை:  2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரம் ஒரு டிரில்லியன் ஆக வேண்டும், அதுவே எனது விருப்பம் என சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருது வழங்கிய முதலமைச்சர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பின் தென் பிராந்திய ஏற்றுமதி வழங்கும் விழா இன்று காலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஓட்டலில் நடைபெற்றது.  ஏற்றுமதியாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்று வரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுள்ளார்.  அவருடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில்,  சிறந்த ஏற்றுமதி நிறுவனங்களுக்கு முதல்வர் விருது வழங்கி கவுரவித்தார். தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர்,  இந்தியாவின் ஏற்றுமதியில் தென் மண்டலம் முக்கிய பங்காற்றி வருகிறது என்றும், தமிழகம் 2030க்குள் ஒரு ட்ரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என விரும்புகிறேன் என்று கூறினார்.

இந்தியாவிலேயே  தொழில் வளர்ச்சியில் தமிழ்நாடு 3வது இடத்தில் உள்ளது. தமிழகத்தில்  ஏற்றுமதி நிறுவனங்களுக்கு தேவையான ஊக்கத்தினை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் உள்ள 35 ஆயிரம் ஏற்றுமதியாளர்களில் 5 ஆயிரம் பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இந்தியாவிலேயே தென்மண்டலங்களின் ஏற்றுமதி அடுத்த 5ஆண்டுகளில் 35%ஆக உயரும் என கணிக்கப்பட்டுள்ளது.  தற்போதைய நிலையில், நாட்டின் ஏற்றுமதியில் தென் மண்டலத்தின் பங்களிப்பு 27%ஆக உள்ளது.

தென் மண்டலத்தில் தமிழகத்தின் பங்கு மிக மிக அதிகமானது. தமிழகம் 2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் பொருளாதாரமாக மாற வேண்டும் என்று விரும்புகிறேன். இந்த இலக்கை அடைய ஏற்றுமதி வர்த்தகம் அதிகம் ஆக வேண்டும். தமிழ்நாட்டின் ஏற்றுமதி அளவு 26 பில்லியன் டாலர். இதை 2030ம் ஆண்டுக்குள் 100 பில்லியன் டாலராக உயர்த்த வேண்டும். இதற்காக பல முன்னெடுப்புகளை அரசு செய்து வருகிறது. மாவட்டம் வாரியாக ஏற்றுமதி மையம் உருவாக்கப்பட்டு வருகிறது.

ஏற்றுமதியில் சிறு, குறு, தொழில் நிறுவனங்கள் சிறந்த பங்களிப்புகளை அளித்து வருகின்றன. சிறு, குறு, தொழில் நிறுவனங்களுக்கு கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கூடுதல் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. jமிழ்நாட்டில் ஏற்றுமதி வர்த்தகம் அதிகரிக்க வேண்டும். ஒன்றிய அரசின் ஏற்றுமதி திட்டங்கள் உற்பத்தியாளர்களை கொண்டு சேர்க்க கூட்டமைப்பு முன்வர வேண்டும்.

இதுமட்டுமின்றி தமிழ்நாட்டில், அறிவுசார் நகரம் உருவாக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 43 புவிசார் குறியீடு பெற்ற பொருட்கள் ஏற்றுமதி மூலம் ஏற்றம் பெற முடியும். மேலும், தமிழ்நாட்டில் உற்பத்தியாகும் 24 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கோரி விண்ணப்பித்து உள்ளோம். ஒவ்வொரு துறைகளுக்கான ஏற்றுமதி வழிகாட்டி வெளியிட விரும்புகிறோம், அதற்கு ஏற்றுமதியாளர்கள் உதவ முன்வர வேண்டும் என அழைப்பு விடுத்தார்.

மேலும் பேசியவர், தமிழ்நாட்டில் ஏற்றுமதி கட்டமைப்பை ஊக்குவிக்க ரூ.100 கோடி சிறப்பு நிதி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை வெளிவட்ட சுற்றுச்சாலை திட்டத்துக்கு ரூ.2,250 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை – கன்னியாகுமரி தொழில் வழித்தட திட்டத்துக்கு ரூ.1,200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சாலை மேம்பாட்டு திட்டத்தின் 2ம் கட்டத்துக்கு ரூ.628 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என கூறியதுடன், ஏற்றுமதியில் நாம் இன்னும் பல மடங்கு உயர முடியும். இதை அரசு இந்த அமைப்பும் இணைந்து நிச்சயம் நிறைவேற்ற முடியும் என்று நம்புவதாக கூறினார்.