டெல்லி: ஆன்லைன் வழியாக நடைபெற்ற செஸ் போட்டியில், உலக செஸ் சாம்பியன் கார்ல்சனை மீண்டும் தோற்கடித்து சாதனை படைத்தார் தமிழக வீரர் பிரக்ஞானந்தா (Rameshbabu Praggnanandhaa). அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

ஏற்கனவே கடந்த பிப்ரவரி மாதம் இணையம் வழியாக நடைபெற்ற ஏர்திங்ஸ் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் எட்டாவது சுற்றில் உலகின் நெ.1 செஸ் வீரர் கார்ல்சனைத் தோற்கடித்து உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்தார் தமிழ்நாட்டைச் சேர்ந்த டீனேஜ் பையனான 16வயது பிரக்ஞானந்தா. இதனால் அவருக்குப் பலத்த பாராட்டுகள் கிடைத்தன. தற்போது சென்னையில் நடைபெற உள்ள செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு தயாராகி வருகிறார்.

இதற்கிடையில், மீண்டும் நடைபெற்ற ஆன்லைன் செஸ் போட்டியான,  செஸ்ஸபிள் மாஸ்டர்ஸ் ரேபிட் செஸ் போட்டியில் கலந்துகொண்ட பிரக்ஞானந்தா உலகின் நம்பர் 1 வீரர்  கார்ல்சனை எதிர்கொண்டார். இருக்கும் இடையே போட்டி கடுமையாக இருந்து வந்தது. இதனால் போட்டி டிராவில் முடியும் என எதிர்பார்த்த நிலையில், 40வது நகர்த்தலுக்கு பிறகு கார்ல்சன் செய்த சிறு தவறை கண்டுபிடித்த பிரக்ஞானந்தா அதை பயன்படுத்திக் கொண்டு வெற்றி பெற்றார். இதையடுத்து கார்ல்சனை 2வதுமுறையாக வீழ்த்தி அசத்தியுள்ளார்  பிரக்ஞானந்தா. அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

தனது வெற்றி குறித்து கருத்து தெரிவித்த பிரக்ஞானந்தா.   என்னுடைய ஆட்டத்தின் தரம் பற்றி எனக்குத் திருப்தியில்லை. சில உத்திகளை நான் தவறவிட்டு விட்டேன். நாளை இன்னும் உஷாராக நான் விளையாட வேண்டும் என்றார். பிரக்ஞானந்தா தற்போது 11ம் வகுப்பு படித்து வருகிறார்.