நாளை காலை தமிழக புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா! முதல்வர் உள்பட 500 நபர்களுக்கு அழைப்பு

Must read

சென்னை: தமிழ்நாட்டின் புதிய கவர்னர் பதவி ஏற்பு விழா நாளை காலை 10.30 மணி அளவில், கவர்னர் மாளிகையின் திறந்த வெளி அரங்கில் நடத்தப்படுகிறது. இந்த விழாவில் பங்கேற்க முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நீதிபதிகள்  உள்பட முக்கிய 500 நபர்களுக்கு  அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

தமிழக கவர்னராக இருந்த பன்வாரிலால் புரோகித்,  பஞ்சாப் மாநில கவர்னராக மாற்றப்பட்டடார். இதையடுத்து, புதிய கவர்னராக நாகலாந்த கவர்னர்  ஆர்.என்.ரவி (வயது 69) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் நேற்று இரவு சென்னை வருகை தந்தார். அவரை முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அதன் பிறகு விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகைக்கு வந்தார்.

அங்கு மெயின் கேட்டில்  இருந்து தமிழக காவல் துறையின் குதிரைப்படை சார்பில் 12 குதிரைகள் அணிவகுப்புடன் மாளிகைக்கு கவர்னர் அழைத்து செல்லப்பட்டார். கவர்னர் மாளிகை அதிகாரிகளும் அவரை வரவேற்று அழைத்துச்சென்றனர். கவர்னருடன் அவரது உறவினர்கள் 15 பேரும் சென்னை வந்துள்ளனர்.

இதைத்தொடர்ந்து ஆர்.என்.ரவி தமிழ்நாட்டின் கவர்னராக நாளை காலை 10.35 மணிக்கு பதவி ஏற்பு விழா நடைபெறுகிறது. அங்குள்ள தர்பார் மண்டபம் அருகே உள்ள திறந்தவெளி புல்வெளி அரங்கில் பந்தல் அமைத்து விழா நடத்தப்படுகிறது. கவர்னர் ஆர்.என்.ரவிக்கு  சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ்பானர்ஜி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.

இந்த பதவி ஏற்பு விழாவில், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித்தலைவர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள், நீதிபதிகள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள் பங்கேற்கிறார்கள். மேலும் பாஜக தலைவர்களான  ஆடிட்டர் குருமூர்த்தி, தமிழக பாரதிய ஜனதா கட்சித் தலைவர் அண்ணாமலை, ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ். அதிகாரி விஜயகுமார் உள்ளிட்ட பிரமுகர்கள் பங்கேற்கவும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் அதிகபட்சமாக 500 பேர் பங்கேற்கும் வகையில் அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளதாகவும்,  பதவி ஏற்பு விழா முடிந்ததும் மேடை அருகிலேயே தேநீர் விருந்து கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும், கவர்னர் மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

More articles

Latest article