சென்னை: சபாநாயகர் அப்பாவு அளித்த 1லட்சம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

தமிழக சட்டசபையில் வேளாண் பட்ஜெட் மீதான விவாதத்தின்போது பேசிய அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம்  தமிழகத்தில் பனை மரத்தை பாதுகாக்க முதல்- அமைச்சர் உத்தரவின்பேரின் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார். அப்போது,  அப்போது சபாநாயகர் அப்பாவு குறுக்கிட்டு ஆண்டுக்கு 1 லட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு தருகிறேன் என்று கூறினார்.

இந்த நிலையில், சபாநாயகர் அப்பாவு வழங்கிய 1லடசம் பனை விதைகளுடன் பனை மேம்பாட்டுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது,

முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று (17.9.2021) தலைமைச் செயலகத்தில், சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு பனை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு இலட்சம் பனை விதைகளை வேளாண் துறைக்கு வழங்குவதை குறிக்கும் விதமாக பனை விதைகளை வழங்கினார்.

தமிழ்நாட்டில் பனைமரங்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு தற்போதுள்ள பனைமரங்களைப் பாதுகாப்ப துடன், கூடுதலாக பனை மரங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக, நடப்பாண்டு 30 மாவட்டங்களில், 76 இலட்சம் பனை விதைகளையும், ஒரு இலட்சம் பனங்கன்றுகளையும் முழு மானியத்தில் விநியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளும் என்று 2021- 22ஆம் ஆண்டு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் தனி நிதி நிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது.

இந்த பனை மேம்பாட்டு இயக்கத்திற்கு 3 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவைத் தலைவர்  மு. அப்பாவு ஒரு இலட்சம் பனை விதைகளை வழங்குவதாக வேளாண் நிதிநிலை அறிக்கையின்போது உறுதி அளித்தார்.  அதன்படி, சட்டப்பேரவை தலைவரால் வழங்கப்பட்ட ஒரு இலட்சம் பனை விதைகள், ஏரிக்கரை, சாலையோரம் மற்றும் விவசாய நிலங்களில் நடவு செய்யும் பனை மேம்பாட்டு திட்டம் இன்று தமிழக முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டது.

இந்நிகழ்வின்போது, வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை செயலாளர் சி. சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஏ.அண்ணாதுரை, தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை இயக்குநர் ஆர். பிருந்தாதேவி, வேளாண்மைத் துறை கூடுதல் இயக்குநர் ஸ்வரன் குமார் ஜடாவத் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.